Home Featured நாடு கூட்டணி இழுபறியில் பிகேஆர் – பாஸ்: இடைத்தேர்தலுக்குள் சுமூகமாகுமா?

கூட்டணி இழுபறியில் பிகேஆர் – பாஸ்: இடைத்தேர்தலுக்குள் சுமூகமாகுமா?

624
0
SHARE
Ad

azmin-ali_hadi-awang_300கோலாலம்பூர் – நடந்து முடிந்த 11-வது சரவாக் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, எதிர்வரும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் அந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்றது.

சுங்கை பெசார் மற்றும் கோல கங்சார் ஆகிய தொகுதிகள் பாரம்பரியமாக பாஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்டு வருபவை. கடந்த 13-வது பொதுத்தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஸ் தோல்வியைத் தழுவியது.

கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் சுங்கை பெசார் தொகுதியில், பாஸ் வேட்பாளர் மொகமட் சாலே எம் ஹுசைனை விட 399 வாக்குகள் பெரும்பான்மையில் தான் அம்னோ வேட்பாளர் டத்தோ நோரியா காஸ்னோன் வெற்றி பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், கோல கங்சார் தொகுதியில், பாஸ் வேட்பாளர் கலீல் இடாம் லிம் பின் அப்துல்லா, சுயேட்சை வேட்பாளர் கமீலா இப்ராகிமை விட, அம்னோ வான் மொகமட் கைர் இல்  1,082 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், இம்முறை பாஸ் கட்சி ஏதாவது ஒரு கூட்டணியுடன் இணைந்து அத்தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதனைக் கருத்தில் கொண்ட பிகேஆர் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ மொகமெட் அஸ்மின் அலி, பிகேஆர், ஜசெக மற்றும் அமனா ஆகிய கட்சிகள் அடங்கிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

ஆனால், அஸ்மின் அலியின் கோரிக்கையை பாஸ் கட்சி நிராகரித்துவிட்டது.

இது குறித்து பாஸ் துணைத்தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறுகையில், இதற்கு முன்பு பாஸ் முக்தாமரில் எடுக்கப்பட்ட முடிவு காரணமாக பிகேஆரின் அழைப்பை நிராகரித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

“ஜசெக மற்றும் அமனா ஆகியவற்றுடன் நாங்கள் இணைவது சாத்தியமில்லை. நாங்கள் எடுத்த முடிவை மீற முடியாது. பிகேஆர் கட்சியுடன் நல்ல நட்புறவையும், ஒத்துழைப்பையும் நிலைநிறுத்த மட்டுமே எங்களால் இயலும்” என்று எப்எம்டி இணையதளத்திடம் கூறியுள்ளார்.

இதனிடையே, பாஸ் உதவித்தலைவர் டத்தோ மொகமட் அமர் அப்துல்லா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், பாரிசானை வீழ்த்த வேண்டும் என்றால் பாஸ் மற்றும் இக்காத்தானுடன் (Parti Ikatan Bangsa Malaysia) பிகேஆர் கைகோர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியுடன் பிகேஆர் இணையும் பட்சத்தில், 14-வது பொதுத்தேர்தலில் மூன்றாவது எதிரணியாக வலுவாகக் களமிறங்கி பாரிசானை வீழ்த்தலாம் என்றும் மொகமட் அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அமனா மற்றும் ஜசெக-வுடன் எந்த ஒரு உடன்படிக்கையும் செய்து கொள்ளப் போவதில்லை என்பதில் பாஸ் உறுதியாக இருப்பதாகவும் அமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

சுங்கை பெசார், கோல கங்சார் இடைத்தேர்தலில் ஒருவேளை பாஸ் கட்சியும், பிகேஆரும் தனித்து நின்று போட்டியிடும் பட்சத்தில், பாரிசானுடன் சேர்ந்து அத்தொகுதிகளில் மும்முனைப் போட்டி உருவாகி, வெற்றி வாய்ப்பு பாரிசானுக்குச் சாதகமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்நிலையில், அஸ்மின் அலியின் அழைப்பு குறித்து பாஸ் தலைவர் ஹாடி அவாங்கின் நிலைப்பாடு என்னவென்பது இன்னும் தெரியவில்லை.

எனவே பிகேஆர் – பாஸ் கட்சிக்கு இடையிலான இழுபறிக்கு முடிவு என்னவென்பது ஹாடி அவாங்கின் அறிவிப்பைப் பொறுத்துத் தான் உள்ளது.