Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 5 – காட்டுமன்னார்கோவில் திருமாவுக்கு வழிகாட்டுமா?

தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 5 – காட்டுமன்னார்கோவில் திருமாவுக்கு வழிகாட்டுமா?

634
0
SHARE
Ad

Thirumaசென்னை – நட்சத்திரத் தொகுதிகள் வரிசையில் தமிழகத் தேர்தலில் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் மற்றொரு தொகுதி காட்டுமன்னார்கோவில். தனித் தொகுதி (அதாவது தலித் அல்லது பின்தங்கிய சமூகத்தினர் மட்டுமே போட்டியிடக் கூடிய தொகுதி) என்பதுடன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதி இதுவாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் தொகுதி என்பதால்தான் இந்தத் தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து!

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஒருமுறை போட்டியிட்டு வென்றிருக்கின்றார் என்ற முறையில் திருமாவுக்கு பரிச்சயமான ஒரு தொகுதிதான் இது.

#TamilSchoolmychoice

பெரும்பான்மை வாக்காளர்கள் தலித் சமூகத்தினர்  

60 சதவீதம் தலித் மக்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி என்ற ஓர் அம்சம், திருமா இங்கு போட்டியிடுவதற்கான காரணங்களில் முக்கியமானது. அவரே தேர்தல் களத்திலும் முன்னணி வகிக்கின்றார் என்றாலும், அது எளிதான வெற்றியாக இருக்காது.

Thirumavalavanகாரணம், அதிமுக, திமுக வாக்கு வங்கிகளைக் கடந்து வாக்குகளைப் பெற்றாக வேண்டும் என்பதுடன், தனித் தொகுதி என்பதால் போட்டியிடும் மற்றவர்களும் தலித் சமூகத்தினர் என்ற காரணத்தால் தலித் வாக்குகள் அனைத்தும் தனக்கே கிடைக்கும் என திருமா கனவு காண முடியாது.

கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற முருகுமாறன் மீண்டும் வேட்பாளராகக் களமிறக்கப்படுவதால், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடுதலாக இருக்கலாம்.

பலமுறை திமுக இங்கே வென்றிருக்கும் காரணத்தால் அந்தக் கட்சியின் கோட்டையாக இந்தத் தொகுதி பார்க்கப்படுகின்றது.

இங்கு காங்கிரஸ் சார்பில் (திமுக கூட்டணி) போட்டியிடுபவர்,  கேஎல் மணிரத்தினம். இவரும் வலுவான வேட்பாளராகப் பார்க்கப்படுபவர் என்றாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசில் தனக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியுற்று, பாமக கட்சிப் பக்கம் தாவியதும், அதன் பின்னர் தனது மனைவியை வேட்பாளராக களமிறக்கியதும், மீண்டும் காங்கிரசில் வந்து ஐக்கியமானதும் மணிரத்தினத்துக்கு எதிரான விமர்சனங்களை வாக்காளர்களிடையே தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் திருமா என்ற மனிதனின் ஆளுமை – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்போடு – இன்றைய தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக எங்கும் வியாபித்துள்ளது. நடிகர் சத்யராஜ் கூட திருமாவின் தலைமைதான் இன்றைய தமிழகத்திற்குத் தேவை என அறிக்கை விடுத்திருப்பது, திருமாவின் மதிப்பையும், தோற்றத்தையும் இந்த முறை ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களிடையே பெருமளவில் கூட்டியுள்ளது.

அதன் காரணமாக காட்டுமன்னார்கோவில் தொகுதியிலும் அவருக்கே வெற்றி கிடைக்கும் என்ற கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன.

மோதிரம் சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவனுக்கு, இந்தத் தொகுதி மோதிரம் அணிவிக்குமா? அல்லது (மோதிரத்தைக்) கழட்டி விடுமா?

-செல்லியல் தொகுப்பு