கோலாலம்பூர் – ஜப்பானில் தனது 7 வயது மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நினைத்த பெற்றோர், அச்சிறுவனை அங்கிருந்த மலை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கே அவனை விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
வீடு திரும்புகையில் மனசு கேட்காமல் மீண்டும் மலைக்குச் சென்று பார்த்த போது, அச்சிறுவனை அங்கு காணவில்லை.
இதனால், அச்சமடைந்த அவர்கள் காவல்துறையில் சென்று, மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தங்களது மகனைத் தொலைத்துவிட்டதாகப் பொய்யான புகார் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.
இந்நிலையில், சுமார் 150 மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும், ஜப்பானின் வடக்கத்திய தீவான ஹோக்கைடோவில் உள்ள அந்த மலையில் இன்று இரண்டாவது நாளாகத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
காவல்துறை அப்பெற்றோரைத் துருவித் துருவி விசாரணை செய்த போது தான், தாங்கள் மகனுக்கு தண்டனை அளிக்கும் நோக்கில் அச்செயலைப் புரிந்ததை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.