கோலாலம்பூர் – மலேசியக் குடிநுழைவு இலாகாவில் கடப்பிதழ் சோதனை முறையில் (MyIMMs), பல்வேறு முறைகேடுகள் செய்து, பயணிகள் பலரை இரகசியமாக நாட்டிற்குள் அனுமதித்த அதிகாரிகள் பலரின் மிகப் பெரிய முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இக்குற்றங்களில் ஈடுபட்ட 15 குடிநுழைவு அதிகாரிகள் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 12 பேருக்கு இடைநீக்கமும், 8 பேருக்கு சம்பள உயர்வு நிறுத்தமும் செய்துள்ளது அரசாங்கம்.
மலேசிய விமான நிலையங்களில் உள்ள குடிநுழைவு இலாகாவின் கணினி அமைப்புகளில் தொடர்ச்சியாக நாளொன்றுக்குப் பலமுறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வந்ததையடுத்து, சந்தேகமடைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இக்குற்றங்கள் அம்பலமாகியுள்ளன.
மலேசியாவிற்கு வருகை புரிபவர்களுக்கு குற்றப் பின்னணி எதுவும் இருக்கின்றதா? என்பதைக் கண்டறியும் முறையில் முறைகேடுகள் செய்து, அவர்கள் எந்தவிதச் சோதனையும் இன்றி மலேசியாவிற்குள் நுழைய அனுமதித்துள்ளதையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் குற்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளதாகவும், இதன் மூலம் மனிதக் கடத்தல் கும்பல், தீவிரவாதிகள் ஆகியோர் மலேசியாவிற்குள் நுழைய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகலையும் விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மலேசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வந்தது.
ஆனால் அந்த எச்சரிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்கள் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகத் தெரிகின்றது.
இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் குடிநுழைவு இலாகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், புதிய சோதனை முறைகள் அமைக்கும் பணியும், அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் பணியும் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றது.
பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் சிலர் குடிநுழைவு இலாகாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் மூத்த அதிகாரிகள் என்று குடிநுழைவு இலாகாவின் பொது இயக்குநர் டத்தோஸ்ரீ சாகிப் குஸ்மி அறிவித்துள்ளார்.