சென்னை – நேற்று பெங்களூரில் ஆலயம் ஒன்றில் வழிபாடு செய்துவிட்டு விமானத்தில் சென்னை திரும்ப வந்த இளையராஜாவை, பெங்களூர் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தியுள்ளனர்.
அவர் தனது பையில் கொண்டு வந்த பிரசாதங்களை அவர்கள் சோதனையிடத் தாமதமாகவே அங்கு சற்று பரபரப்பு நிலவியுள்ளது.
இந்த விசயம் எப்படியோ தமிழ்நாட்டில் பரவ, கொதித்தெழுந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இளையராஜாவை அவமதித்த அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இது ஒரு சாதனைத் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும். இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்.
இந்நிலையில், இளையராஜா நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“விமான நிலையங்களில் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். இதை விட கடுமையான சோதனைகளையெல்லாம் நான் கடந்து வந்திருக்கிறேன். இந்தியர்கள் ஏன் இது போன்ற தேவையில்லாத பிரச்சனைகளுக்கு தங்களது சக்தியை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை”
“தனது குடும்பம், உறவுகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்து தங்களது பணிகளைச் செய்து வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தான் முறை. அதன் படி அவர்கள் தங்கள் பணியை செய்தார்கள். நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.”
“என்னை சோதனை செய்து காத்திருக்க வைத்ததால் நான் ஒன்றும் சிறுமை அடையவில்லை. நான் எப்பவும் ராஜா தான். எனவே இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் விளக்கத்தைக் காணொளி வழி இந்த இணைப்பில் காணலாம்:-
https://www.facebook.com/Ilaiyaraaja/videos/1170400823004463/