சென்னை – இயற்கையாக இழந்த அழகை, செயற்கையாகப் புதுப்பிக்க எத்தனையோ மாற்று வழிமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் வந்துவிட்டன. மூக்கு நீளமாக வேண்டுமா?, உதடு சிறியதாக வேண்டுமா? கன்னச் சதைகள் குறைய வேண்டுமா? இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகும் அளவிற்கு உடலின் அனைத்துப் பாகங்களையும் செயற்கையாக அழகுப் படுத்தும் முறை இப்போது உலகைக் கவர்ந்து வருகின்றது.
அந்த வகையில், பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சனையான வழுக்கைத் தலைக்கு தற்போதைய தீர்வாகக் கருதப்படுவது முடிமாற்று அறுவைச் சிகிச்சை.
இந்நிலையில், பட்டதாரிகளும், தொழிலதிபர்களும், சினிமாப் பிரபலங்களும் நிறைந்து காணப்படும் சென்னை மாநகரத்தில், வீதிக்கு வீதி அது போன்ற அழகு சிகிச்சை மையங்கள் பெருகிக் கிடக்கின்றன.
அவைகளெல்லாம் முறையான அனுமதியுடன் தான் நடத்தப்படுகின்றனவா? சிகிச்சை முறைகளை அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் தான் செய்கின்றார்களா? என்று தற்போது மிகப் பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் மரணம்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவரான சந்தோஷ் குமார் அண்மையில் செய்து கொண்ட முடிமாற்றி அறுவை சிகிச்சையால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
பாண்டியராஜ், ஜோஸ்பீன் தம்பதியருக்கு 12 ஆண்டுகள் கழித்துப் பிறந்த ஒரே மகனான சந்தோஷ் குமார், கடந்த மே 17-ம் தேதி மரணமடைந்துள்ளார்.
இச்செய்தி ‘டைம் ஆப் இந்தியா’ பத்திரிகை மூலம் தற்போது வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.
நுங்கம்பாக்கத்திலுள்ள ரோபோட்டிக் ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் என்ற மையத்தில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் சந்தோஷ். ஆனால் அம்மையமோ முடி வெட்டுவதற்கு மட்டுமே முறையான அனுமதி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
தற்போது அந்த மையத்தை தடை செய்துள்ள அதிகாரிகள், சந்தோஷ் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.