முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் அமைச்சர் பதவி நீக்கத்திற்குப் பின்னர் இதுவரை மஇகா சார்பிலான இரண்டாவது அமைச்சர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்து வருகின்றது.
அண்மையில் நடந்து முடிந்த கோலகங்சார், சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றதற்கு இந்திய வாக்குகளை ஒன்று திரட்டுவதில் மஇகாவின் பங்கும் கணிசமான அளவுக்கு உதவியிருக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு, மஇகாவுக்கு இரண்டாவது முழு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மஇகா வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
அடுத்த இரண்டாண்டுகளில் நடைபெறவிருக்கும், 14வது பொதுத் தேர்தலில் வலுவுள்ள சக்தியாக மஇகா உருவெடுப்பதற்கு, இந்த இரண்டாவது அமைச்சர் பதவி பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே வேளையில், மஇகாவில் கூடுதலாகப் பதவிகளைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒரு முழு அமைச்சர் பதவிக்குப் பதிலாக, இரண்டு துணை அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்களும் உலவுகின்றன.
மஇகாவுக்கு வெளியிலிருந்து இந்தியர் ஒருவர் துணையமைச்சராக நியமிக்கப்படக் கூடும் சாத்தியமும் நிலவுகின்றது. ஹிண்ட்ராப் இயக்கத்தின் சார்பில் துணை அமைச்சராகப் பதவி வகித்த பி.வேதமூர்த்தி பதவி விலகியதைத்தொடர்ந்து, அந்தப் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
அந்த நியமனத்தை நிரப்பும் வகையிலும், மஇகாவைச் சார்ந்திராத அமைப்புகள், இயக்கங்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில், தேசிய முன்னணியை ஆதரிக்கும் இந்தியர் கட்சிகள், அல்லது இந்தியர் அமைப்புகளிலிருந்து துணையமைச்சர் ஒருவரை நஜிப் நியமிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் அரசியல் வட்டாரங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.