சென்னை – ஒரு பொது இடமான சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கணினிப் பொறியியலாளர் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தான கோபால கிருஷ்ணன் என்பவரின் 24 வயது மகள் சுவாதிதான் (படம்) வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்.
அலுவலகத்திற்கு செல்வதற்காக, நேற்று காலை 6.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு வசதியாக இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் சுவாதி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் பின்னால் வேகமாக வந்த மர்ம ஆசாமி ஒருவர் பட்டாக்கத்தியால் சுவாதியை சரமாரியாக வெட்டினார்.
இதனால் சுவாதி உயிரிழந்தார்.
வெட்டுப்பட்ட சுவாதி இரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே சுமார் இரண்டு மணி நேரம் அப்படியே கிடந்தார் என்றும் யாரும் அவரைக் காப்பாற்றவோ, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ யாரும் முன்வரவில்லை என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பின்னர் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு புலனாய்வுகள் தொடங்கப்பட்டன.
சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று மாலையோடு பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என சென்னை காவல் துறையினர் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர். காதல் விவகாரமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடத்திய சோதனையில் ‘டிராவல் பேக்’கில் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள். சுவாதியை கொல்ல மர்ம ஆசாமி இந்த கத்தியை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.