புதுடில்லி – பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றார். அண்மையில் சுல்தான் படத்தில் நடித்தது தொடர்பில் அவர் கூறிய சில விமர்சனங்கள் பெண்கள் மத்தியில் பூம்பகத்தைக் கிளப்ப, மகளிர் அமைப்புகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வற்புறுத்தி வருகின்றன.
இதற்கிடையில், மும்பையில் சாலையோரத்தில் தூங்கிக் கிடந்த ஒருவர் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அவர் மீது வழக்கு தொடுத்தது மகராஷ்டிரா மாநில அரசாங்கம். ஆனால், அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவரது விடுதலையை எதிர்த்து மகராஷ்டிரா அரசாங்கம் செய்திருந்த மேல் முறையீடு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சல்மான் கான் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சல்மான் கானின் விடுதலை நிலைநிறுத்தப்படுமா அல்லது அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணை தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.