கோலாலம்பூர் – சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய இஸ்லாமியப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மலேசியாவுக்கு வருகை தந்தபோது, அவரது உரைகள் தீவிரவாதத்தைத் தூண்டுவதாகவும், மற்ற மதங்களை அவதூறு செய்வதாகவும் கூறி பல மலேசிய அமைப்புகள், குறிப்பாக, முஸ்லீம் அல்லாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
சில முஸ்லீம் அமைப்புகள் கூட ஜாகிரின் மதப் பிரச்சார அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரியும் கூட ஜாகிர் போன்றவர்களின் பிரச்சாரங்கள் நமக்குத் தேவையில்லை, நமது உள்நாட்டு பிரச்சாரகர்களே போதும் எனக் கூறியிருந்தார்.
மலேசியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஜாகிர் நாயக்…
அன்று மலேசிய அமைப்புகள் காட்டிய எதிர்ப்புகளும், ஜாகிருக்கு எதிராகத் தெரிவித்த கண்டனங்கள், போராட்டங்கள் இன்று நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதோடு, அவருக்கு எதிரான போராட்டங்கள் சரியான அணுகுமுறைதான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஜாகிரின் உரைகள் தாக்குதலுக்கு தூண்டுகோலாக அமைந்தனவா?
டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஜாகிரின் உரைகள் தூண்டுகோலாக இருந்தன என்ற தகவல்கள் விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதைத் தொடர்ந்து வங்காளதேச அரசாங்கம் அவர் மீதான புலனாய்வுகளை முடுக்கி விட்டு, இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் கோரியிருக்கின்றது.
சர்ச்சைக்குரிய ஜாகிரின் மலேசிய வருகையும்- அவரது உரை மீதான அழைப்பிதழும்…
இந்தியாவின் மகராஷ்டிரா அரசாங்கம் ஜாகிர் உரைகள் மீதான விசாரணைகள் தொடங்கும் என அறிவித்திருக்கின்றது.
இந்தியாவின் தேசியப் புலனாய்வுத் துறை ஜாகிரிடம் விசாரணை நடத்துவோம் எனக் கூறியிருக்கிறது.
இருப்பினும், இந்தத் தாக்குதல்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியுள்ள ஜாகிர் நாயக், டாக்கா தாக்குதல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும், வங்காளதேச அரசாங்கத்திற்கும் தனது ஒத்துழைப்பை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக் பிரதமரைச் சந்தித்தபோது….