சென்னை – இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டம், செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராம்குமார், நேற்று மனம் திறந்து பேசியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில் ராம்குமார் சில தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறியுள்ளனர்.
ராம்குமார் அவர்களிடம் கூறியிருப்பதாவது:-
“நான் தங்கியிருந்த மேன்சனுக்கு அருகிலேயேதான் சுவாதியின் வீடும் இருந்தது. அந்த மேன்சன் வழியாக அவர் செல்லும்போது இயல்பாக எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. எனக்கு ஒரு நல்ல தோழியாகவே அவர் இருந்தார். தினமும் அந்த வழியாக செல்லும்போது இயல்பாக பார்த்து பேசிக்கொள்வது எங்களுக்குள் இருந்தது.”
“சம்பவம் நடந்த அன்று காலையில் எனது மேன்சனில்தான் இருந்தேன். அவரை நான் சந்திக்கவில்லை. அவர் படுகொலையான செய்தியை கேள்விபட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். எப்போதும் ஊருக்கு செல்வதுபோல் அன்றும் எனது ஊருக்கு வந்து விட்டேன். இந்த கொலையில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இந்த படுகொலை வழக்கில் போலீசார் என்னை சந்தேகித்து வருவார்கள் என நான் நினைக்கவில்லை.”
“நான் வீட்டில் இருந்தபோது போலீஸ் உடையிலும், சாதாரண உடையிலும் இருந்த 20 பேர் என்னை தாக்க வந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.”
“நான் கழுத்தை அறுத்துக்கொள்ள எந்த சூழ்நிலையிலும் முயற்சிக்கவில்லை. அந்த நிமிடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. கண்விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன்.”
“இந்த வழக்கில் போலீசார் என்னை குற்றவாளியாக சேர்த்திருப்பது குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன். சுவாதியின் அப்பாவுக்கும் என்னை தெரியும். என்னை அவர் பார்த்திருக்கிறார். வேண்டுமென்றே இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன்” எனக் கூறியதாக சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.