Home Featured நாடு “மனத்தோடு மழைச்சாரல்” – மழைச்சாரல் குழுமத்தின் இலக்கிய விழா!

“மனத்தோடு மழைச்சாரல்” – மழைச்சாரல் குழுமத்தின் இலக்கிய விழா!

1447
0
SHARE
Ad

Mazhaicharalகோலாலம்பூர் – அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வுலகம் தன்னை ஒவ்வொரு நாளும், மேம்படுத்திக் கொண்டு வரும் நிலையில், துறை சார்ந்தவர்களும் அதன் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்த வகையில், தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப பேஸ்புக், வாட்சாப், டுவிட்டர் என நட்பு ஊடகங்கள் அனைத்திலும் அதிதீவிரமாக இயங்கி வருகின்றனர்.

வாட்சாப்பில் இலக்கியவாதிகள் ஒன்றிணைந்து, பல்வேறு ஆக்ககரமான விவாதங்களையும், விமர்சனங்களையும் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் அப்படி ஒரு தீவிர இலக்கியச் சிந்தனையுடன் இயங்கி வரும் வாட்சாப் குழுமம் தான் மழைச்சாரல்.

மலேசியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும் வாணி ஜெயம் (மீராவாணி) நிர்வகித்து வரும் மழைச்சாரல் குழுமத்தில், மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களும், இலக்கியவாதிகள் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

அக்குழுமம் வெற்றிகரமாக முதலாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு, இலக்கிய ஒன்று கூடல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழைச்சாரல் குழும உறுப்பினர்களோடு இந்நிகழ்ச்சியில், தமிழகக் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மழைச்சாரல் குழும உறுப்பினர்கள் அறிமுகம், தமிழில் நேரும் இலக்கணப் பிழைகள் என்ற தலைப்பில் ம.மன்னர் மன்னன், ஹைக்கூ உலகம் என்ற தலைப்பில் ந.பச்சைபாலன், மலேசியப் பெண்ணிய எழுத்து எனும் தலைப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் டாக்டர் ஸ்ரீலஷ்மி, மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் ஸ்ரீதர் ரங்கராஜ் ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.

மேலும் யவனிகா ஸ்ரீராமின் நேர்காணல், நவீனக் கவிதைகள் குறித்த உரை ஆகியவையும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, மழைச்சாரல் குழும் உறுப்பினர்களின் கவிதை அடங்கிய நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது. அக்கவிதைகள் தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்நூலில் இடம்பெறுகின்றது.

ஆங்கிலத்தில் டாக்டர் ஜான்சனும், மலாய் மொழியில் ம.மன்னர் மன்னன், எம்.கருணாகரன், கோவி.மணிமாறன் ஆகியோர் அக்கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.

இலக்கியம் சார்ந்த அத்தனை அம்சங்களும் கொண்ட பயனுள்ள இந்நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வல்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, மழைச்சாரல் குழுமத்தினரால் அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்கள்:

நிகழ்ச்சி நடைபெறும் நாள்: 24-07-16 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: துன் சம்பந்தன் மாளிகை, கோலாலம்பூர்.