புதுடில்லி – சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான ஜின் ஹூவா நியூஸ் ஏஜன்சியில் பணிபுரியும் மூன்று சீன பத்திரிக்கையாளர்கள் இந்த மாதத்திற்குள்ளாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மூன்று பத்திரிக்கையாளர்களின் குடிநுழைவு அனுமதியை நீட்டிக்க இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது. அதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று பத்திரிக்கையாளர்களை ஜின் ஹூவா செய்தி நிறுவனம் அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூன்று பத்திரிக்கையாளர்களும் தங்களின் பத்திரிக்கைத் துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களை மீறி நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் தலையிட்டனர் என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் பெங்களூர் நகரில் வாழும் திபெத்திய அகதிகளை சம்பந்தப்பட்ட சீன பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்டனர் என்றும் அதன் காரணமாகத்தான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக, சில இந்திய ஏடுகள் தெரிவித்துள்ளன.
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை உறுப்பினராக அனுமதிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.