நியூயார்க் – நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அனைவரும் மெய்மறக்கும் வகையில் தனது இனிய குரல் வளத்தால் இந்திய கர்நாடக இசையை பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கியவர் இசை மேதை அமரர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
அதற்குப் பின்னர் அத்தகைய ஒரு வாய்ப்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15-ந்தேதி ஐ.நா. சபையில் விரிவாகக் கொண்டாட செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
ஐநா சபையின் பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ரகுமானின் இசை வெள்ளத்தில் மிதக்க ஒன்று திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டில் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெறுகின்றது.
ஐநா சபையில் இசைமுழக்கம் செய்த – செய்யப் போகும் – இருவருமே தமிழகத்தின் இசைமேதைகள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.