ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்த முறை ஏற்று நடத்தும் நாடானாலும், போட்டிகள் தொடங்கி மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில் தங்கம் எதையும் பெறாமல் இருந்து வந்தது பிரேசில்.
அந்தக் குறையைப் போக்க நேற்று நடந்த ஜூடோ போட்டியில் பிரேசில் நாட்டுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்ததன் மூலம், ஒரே நாளில், அந்நாட்டின் கதாநாயகியாகவே மாறிவிட்டார் ரபேலா சில்வா (படம்).
57 கிலோ பெண்களுக்கான பிரிவில், 24 வயது ரபேலா மங்கோலியாவின் முன்னணி ஜூடோ வீராங்கனை சுமியா டோர்ஜ்சுரன் என்பவரை இறுதிச் சுற்றில் வீழ்த்தி, தங்கம் பெற்றுத் தந்த அந்தக் கணத்திலேயே, பிரேசில் முழுவதும் உற்சாகமும், குதூகலமும் தீயெனப் பரவியது.
காரணம், இதுதான் பிரேசிலின் முதல் தங்கம்!
ரபேலா வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஜூடோ
இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனையை ரபேலா வீழ்த்தும் காட்சி…
பிரேசிலுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தவர் என்ற ரீதியில் மட்டுமல்லாமல், விளையாட்டுகள் மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதற்கான உதாரணங்களில் ஒருவராகவும் திகழ்கிறார் ரபேலா.
காரணம், அவர் வாழ்ந்து வளர்ந்த கோட் ஃபவேலா என்ற ஊர், பிரேசிலிலேயே மிகவும் வறுமையான, அபாயகரமான வட்டாரங்களுள் ஒன்று எனப் பெயர் பெற்றதாகும்.
முதல் தங்கத்தை நாட்டுக்குப் பெற்றுத் தந்தவர் என்பதற்காக மட்டுமல்லாமல், அவரது வாழ்க்கையை ஜூடோ விளையாட்டு எவ்வாறு முன்னேற்றகரமாகப் புரட்டிப் போட்டது என்பதற்காகவும் போற்றப்படுகின்றார் ரபேலா.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஜூடோவுக்காக வெண்கலம் வென்ற பிரேசில் வீரர் பிளேவியோ கொந்தோ என்பவர் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் தொடக்கிய ஜூடோ பள்ளியில்தான் ரபேலா பயிற்சி பெற்றார்.
“அந்தப் பள்ளியில் சேர்வதற்கு முன்னால், நாங்கள் படிப்பில் அக்கறையில்லாமல், யார் பேச்சையும் கேட்காமல், முரட்டுத் தனமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்தப் பள்ளியில் சேர்ந்த பின்னர் நாங்கள் முற்றிலுமாக மாற்றம் பெற்றோம்” என்று கூறியிருக்கிறார் ரபேலாவின் சகோதரி ராக்குவெல். இவரும், இதே பள்ளியில் பயிற்சி பெற்ற ஒரு ஜூடோ வீராங்கனையாவார்.
ரபேலா தங்கத்துக்காக போராடியதையும், தங்கம் வென்ற காட்சியையும் அவரது தாயார் உட்பட அவரது குடும்பமே அரங்கத்தில் அமர்ந்து பார்த்து இரசித்தது என்பது ரபேலாவின் வாழ்வில் இன்னொரு நெகிழ்ச்சியான தருணம்.