கோயம்புத்தூர்- பல்வேறு புகார்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கியுள்ள – ஆன்மீகக் குரு ஜக்கி வாசுதேவ் (படம்) தலைமையில் இயங்கும் – ஈஷா யோகா மையத்திற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்த நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழுவினர் நேற்று வருகை தந்துள்ளனர்.
தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.
கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தில் தங்களுடைய பெண் பிள்ளைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பலருக்கு கட்டாயத்தின் பேரின் துறவறம் அவர்கள் மீது திணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதில் முன்னாள் பேராசிரியர் காமராஜ், இவரது மனைவி சத்யஜோதி ஆகியோர், தங்களது மகள்களை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான அதிகாரிகள், மற்றும் வழக்கறிஞர்கள் கொண்ட குழு ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
தங்களின் விசாரணை குறித்த அறிக்கையை இவர்கள் தாக்கல் செய்த பின்னர் அடுத்த கட்ட முடிவுகளை சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும்.