ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்சில் தங்கம் வெல்லும் மலேசியாவின் கனவு இதுவரை எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால், இன்று, அந்தக் கனவு நனவாகக் கூடிய வாய்ப்பு மிக, மிக, நெருங்கி வந்துள்ளது.
ஆண்களுக்கான இரட்டையர் ஆட்டத்தில் கோ வி ஷெம் – டான் வீ கியோங், இணை நாளை வியாழக்கிழமை இரவு இறுதி ஆட்டத்தில் சீனாவின் ஃபூ மற்றும் சாங் இணையுடன் மோதவிருக்கின்றனர். கடுமையான சவாலாக இருக்கப் போகும் இந்தப் போட்டியில் அவர்கள் வென்றால், மலேசியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தரும் இணையாக அவர்கள் திகழ்வார்கள்.
அப்படியே அவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிட்டாலும், அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிடும்.
சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை
அடுத்து, தங்கம் வெல்லும் இன்னொரு வாய்ப்பும் இன்று மலேசியாவுக்குக் காத்திருக்கின்றது. இன்று புதன்கிழமை பின்னிரவு (மலேசிய நேரம்) 11.30 மணியளவில் நடைபெறும் பூப்பந்து போட்டிக்கான கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை, இந்தோனிசியாவின் எல்.நட்சிர் – டி.அகமட் இணைக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கின்றனர்.
நமது பூப்பந்து விளையாட்டாளர்கள் நாட்டுக்கு ஒலிம்பிக்ஸ் தங்கத்தை இன்று கொண்டு வருவார்களா, என்பதைக் காண ஒட்டு மொத்த மலேசியாவும் ஆவலுடன் காத்திருக்கின்றது.
லீ சோங் வெய் இந்த முறை சாதிப்பாரா?
இன்று இரவு மலேசியாவின் மற்றொரு முன்னணி ஆட்டக்காரர் லீ சோங் வெய்யும் களம் இறங்குகிறார். கால் இறுதி ஆட்டத்தில் அவர் தைவான் நாட்டின் சௌ தியன் சென் என்ற விளையாட்டாளருடன் மோதுகின்றார்.
இந்த ஆட்டமும் இன்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது.