கோலாலம்பூர் – பவானியை நினைவிருக்கிறதா? – லிசன் .. லிசன்.. லிசன்.. (Listen .. Listen.. Listen..) என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வந்துவிடுவார்.
ஆம்.. அன்றைய சட்டக்கல்லூரி மாணவி, இன்று புதன்கிழமை (17-8-2016) , ஈப்போ உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2013-ம் ஆண்டு, உத்தாரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற “பல்கலைக் கழக மாணவர்கள் அரசியலோடு நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்களா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை வழங்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இந்த கே.எஸ்.பவானி.
அப்போது சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பவானி, பிடிபிடிஎன் கல்விக் கடனுதவிக்கு எத்தனையோ கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் செய்வது போல், மற்ற செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போல், பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி வழங்குவதற்கும் ஏன் அரசாங்கம் உதவி செய்யக் கூடாது என்று கேள்வி கேட்டார்.
அவருக்கு பதிலளித்த அந்த கருத்தரங்கின் நடுவரும் 1மலேசியா சுவாரா வனித்தா எனப்படும் ஒரே மலேசியா மகளிர் குரல் அமைப்பின் தலைவருமான ஷரிபா சோரா ஜபின், பவானியை இளக்காரமாகப் பேசியதோடு, அந்த நாடுகளில் இலவசக் கல்வி வழங்குகின்றார்கள் என்றால் அந்த நாட்டுக்கே போக வேண்டியதுதானே? என்று பவானியை மட்டம் தட்டினார். ஷரிபாவின் கருத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
இதனிடையே, இன்று பவானி வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டது குறித்து பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.அருட்செல்வன் இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், “அதிகாலையில் எழுந்து நீதிமன்றம் செல்வது போல் ஒரு சலிப்பான விசயம் ஒன்றும் இல்லை. ஆனால் இன்று நானும், டாக்டர் நசீர் மற்றும் செல்வம் ஆகியோரும் அதிகாலையிலேயே எழுந்து ஈப்போ உயர்நீதிமன்றத்தில் கே.எஸ் பவானி அதிகாரப்பூர்வமாக வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டுள்ளதைக் கொண்டாட வந்திருக்கிறோம். ஒரு வழக்கறிஞராக பவானி தொடர்ந்து நீதிக்காகவும், உண்மைக்காகவும் போராடுவார் என நம்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.