ரியோ டி ஜெனிரோ – (கூடுதல் தகவல்களுடன்) இன்று இரவு மலேசிய நேரப்படி 9.00 மணியளவில் நடைபெற்று முடிந்த அரை இறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டானைத் தோற்கடித்ததன் மூலம் மலேசியாவிற்கு தங்கம் பெற்றுத் தரும் தனது முயற்சியில் ஒரு படி முன்னேறியிருக்கின்றார் லீ சோங் வெய்.
இன்றைய ஆட்டம் லீ சோங் வெய்யைப் பொறுத்தவரை வரலாற்றுபூர்வ ஆட்டம் என்பதோடு, ஒரு பழி தீர்ப்பு என்று கூடச் சொல்லும் அளவுக்கான வெற்றியாகும். காரணம் கடந்த 2008, 2012 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்து இதே லின் டானிடம் தங்கப் பதக்கத்தைப் பறிகொடுத்தவர் லீ சோங் வெய்.
அந்தத் தோல்விகளைப் பழி தீர்த்துக் கொள்ளும் வண்ணம் இன்றை அரை இறுதி ஆட்டத்தில் லின் டானைத் தோற்கடித்துள்ளார் லீ சோங் வெய்.
முதல் ஆட்டத்தில் தோல்வியுற்றபோது, மலேசியர்களின் கனவுகளும் சற்றே சரியத் தொடங்கின. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு இரண்டாவது செட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற சோங் வெய், மூன்றாவது ஆட்டத்தில் 20-20க்கு புள்ளிக் கணக்கில் இறுதிக் கட்டத்திற்கு வந்தபோது, மலேசியர்களின் பதைபதைப்பும், இருதயத் துடிப்பும் உச்சத்திற்கே போனது.
இறுதிப் புள்ளியைப் பெற்று மலேசியர்கள் மனங்களை குளிர்வித்திருக்கின்றார் லீ சோங் வெய்.
இந்த வரலாற்று பூர்வ ஆட்டத்திற்குப் பின்னர் லீ சோங் வெய்-லின் டான் இருவரும் கட்டிப் பிடித்து தங்களின் மேல் பனியன்களை பரிமாறிக் கொண்டது மற்றொரு நெகிழ்ச்சியான – விளையாட்டுத் துறைக்கே கௌரவம் சேர்க்கும் நற்பண்பாகும்.