ரியோ டி ஜெனிரோ – இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் நாள் இரவு மலேசியாவைப் பொறுத்தவரை, அதன் விளையாட்டுத் துறை வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமையக் கூடும்.
ஆண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டானைத் தோற்கடித்து லீ சோங் வெய் வரலாறு படைத்த நாள் இன்று.
இன்றைய அதே நாளில் மலேசிய நேரம் இரவு 11.00 மணியளவில் நடைபெறவிருக்கும் ஆண்களுக்கான இரட்டையர் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் சார்பில் கோ வி ஷெம் மற்றும் டான் வீ கியோங் இணை, சீனாவின் ஃபூ ஹாய்ஃபெங் மற்றும் சாங் நான் இணையைச் சந்திக்கிறார்கள்.
உலகின் தர வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பவர்கள் இன்று இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ள சீனாவின் ஃபூ ஹாய்ஃபெங் மற்றும் சாங் நான் இணை.
மலேசியர்களோ உலகத் தர வரிசையில் 12-வது இடத்தில் இருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில் இவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், ஒலிம்பிக் விளையாட்டுகளில் மலேசியா முதன் முதலில் தங்கம் பெற்ற நாளாக வரலாற்றில் ஆகஸ்ட் 19 நிரந்தரமாக இடம் பெற்று விடும்.