Home Featured நாடு ஐஎஸ் தீவிரவாதிகள் கைதால் பத்துமலை மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டது!

ஐஎஸ் தீவிரவாதிகள் கைதால் பத்துமலை மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டது!

600
0
SHARE
Ad

malaysia1_2_read-onlyகோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சுதந்திர தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

நேற்று புதன்கிழமை நாட்டின் சுதந்திர தினம் கோலாகலமாக – எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடந்து முடிந்திருக்கும் வேளையில், மூன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைக் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

சிரியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஐஎஸ் இயக்கத்தில் மலேசியப் பிரிவுக்கு தலைவராகச் செயல்படும் முகமட் வாண்டி முகமட் ஜெடி கடந்த ஜூலை மாதத்தில் உத்தரவு விடுத்ததைத் தொடர்ந்து இவர்கள் மூவரும் பத்துமலை ஆலய வளாகம், காஜாங் காவல் துறை தலைமையகம் மற்றும் சில கேளிக்கை, உல்லாச மையங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தனர். அதற்காக ஆயுதங்களையும், தகவல்களையும் சேகரித்து வந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படும் புக்கிட் அமான் தலைமையகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் சிறப்புப் படையினர் ஆகஸ்ட் 27 முதல் 29 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்த பயங்கரவாதிகள் மூவரையும் நோட்டமிட்டு கைது செய்துள்ளனர்.

சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இவர்கள் தாங்கள் குறி வைத்திருந்த மையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்ற நெஞ்சை உறைய வைக்கும் தகவலும் காவல் துறையினரால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

20 வயதுடைய முதலாவது சந்தேகப் பேர்வழி ஆகஸ்ட் 27ஆம் தேதி சிலாங்கூரில் ‘K75’ இரக வெடிகுண்டு மற்றும் ரவைகளுடன் கூடிய கைத்துப்பாக்கியுடனும் கைது செய்யப்பட்டிருக்கின்றான்.

இதனைத் தொடர்ந்து 20 மற்றும் 27 வயதுடைய இரண்டு நபர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவன் லாரி டிரைவராகப் பணியாற்றி வந்திருக்கின்றான். அவனிடமிருந்து, வெடிகுண்டு ஒன்றையும், 24 ரவைகளுடன் கூடிய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்களின் தாக்குதல்களை நடத்தி முடித்தவுடன் சிரியாவுக்குத் தப்பிச் செல்லவும் இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.