கோலாலம்பூர் – சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவி வரும் நிலையில், மலேசியாவில் 58 வயது பெண் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மலேசியாவில் பதிவாகும் முதல் ஜிக்கா வைரஸ் தாக்குதல் இதுவென்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்புக்குள்ளான பெண்ணின் தாய் தான் இவர்.
கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி, தனது மகளைக் காண கணவருடன் சிங்கப்பூர் சென்ற அப்பெண், ஆகஸ்ட் 21-ம் தேதி மலேசியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு உடலில் தடிப்புகளும், காய்ச்சலும் ஏற்பட்டதையடுத்து, கிள்ளானில் உள்ள தனியார் மருத்துவ மையத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு செய்யப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இன்னும் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.