சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கூடியது. அதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில், முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சங்க நிதியில் பல கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் மீது இவர்கள் மூவர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் சார்பில் பூச்சி முருகன் நேற்று திங்கட்கிழமை, சரத்குமார் உள்ளிட்ட நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள், வரவு செலவு கணக்கில் பலகோடி ரூபாய் ஊழல் புரிந்ததாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அப்புகாரைத் தொடர்ந்து, காவல்ஆணையரிடம் சரத்குமார் அளித்துள்ள விளக்கத்தில்,”பலகோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிற நடிகர் சங்க நிர்வாகிகள் என்னிடமே விளக்கம் கேட்டிருக்கலாம். நடிகர் சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும் முறையாக தணி்க்கை அலுவலர் மூலம் சரிபார்க்கப்பட்டே ஒப்படைக்கப்பட்டது. புகாரில் தெரிவித்துள்ளபடி நான் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை. என் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.