சென்னை – காங்கிரசின் பாரம்பரியத்தில் இருந்த வராத ஒருவரான திருநாவுக்கரசர் இன்று புதன்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய எதிர்பார்ப்புகளை அவரது நியமனம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், காங்கிரசுக்கே உரிய சர்ச்சைகளும், கோஷ்டிப் பூசல்களும் மீண்டும் புதிதாக முளைக்கக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சர்ச்சைக்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) ராஜினாமா செய்ததால், கடந்த 4 மாதங்களாக காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தற்போது திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக காங்கிரசின் பாரம்பரியத்தில் ஊறித் திளைத்த தலைவர்கள்தான் பொதுவாக மாநிலப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
ஆனால், தற்போது பொறுப்பேற்றிருக்கும் திருநாவுக்கரசர் பல கட்சிகளில் இருந்து தாவித் தாவி இறுதியாக காங்கிரஸ் கட்சியின் கரையில் ஒதுங்கியிருப்பவர்.
நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்துவுடன் திருநாவுக்கரசர்…
1972-ம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து தூக்கியெறியப்பட்டபோது அவரோடு கைகோர்த்த இலட்சக்கணக்கான இளைஞர், மாணவர் பட்டாளத்தில் ஒருவராக தமிழக அரசியலில் நுழைந்தவர் திருநாவுக்கரசர்.
எப்படியோ எம்ஜிஆருக்கு அவரைப் பிடித்துப் போக, 1977-ம் ஆண்டு அறந்தாங்கி தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் இன்றுவரை, அறந்தாங்கி, புதுக்கோட்டை பகுதிகளில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒருவராக வலம் வருபவர்.
எம்.ஜி.ஆர். 1977ஆம் ஆண்டில் அமைத்த முதல் அமைச்சரவையில் முதன் முதலாக துணை சபாநாயகராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டர். 1980-87 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். மேலும், அறந்தாங்கி சட்ட மன்றத் தொகுதியில் இருந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் கொண்டவர் திருநாவுக்கரசர். அந்த காலகட்டங்களில் எம்ஜிஆரின் பாசத்துக்குரிய செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்டவர்.
1999-ல் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர், பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவையில், கப்பல் போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2004-ல் மத்தியப் பிரதேசத்தில் பாஜக சார்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்றார்.
1987-இல் நிகழ்ந்த எம்ஜிஆரின் மரணம் திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்வையும் அலைக்கழித்தது. எம்ஜிஆர் மனைவி ஜானகி-ஜெயலலிதா அணிகள் எனப் பிரிந்த அதிமுகவில் ஜெயலலிதாவை ஆதரித்து அரசியல் நடத்திய திருநாவுக்கரசர், எம்ஜிஆர் இருந்த காலத்திலேயே ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டார்.
பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட திருநாவுக்கரசர், எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் சொந்தக் கட்சி நடத்தினார்.
ஒரு தமிழ்ப் படத்தில் கதாநாயகனாக நடித்த பெருமையும் திருநாவுக்கரசருக்கு உண்டு.
ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியைக் கலைத்து விட்டு, பாஜகவில் இணைந்தார்.
காங்கிரசில் இணைந்த போது – குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரத்துடன்….
பாஜகவில் இணை அமைச்சராக பதவி வகிக்கும் அளவுக்கு – அகில இந்திய செயலாளராகப் பதவி வகிக்கும் அளவுக்கு – அந்தக் கட்சியில் உயர்ந்தாலும், ஏனோ அங்கிருந்தும் விலகினார். தொடர்ந்து பாஜகவில் இருந்திருந்தால், இன்று மோடி பிரதமராகி இருக்கும் நிலையில் பாஜகவின் முக்கியப் பொறுப்பாளராக அவர் உயர்ந்திருக்கக்கூடும்.
ஆனால் விதி யாரை விட்டது?
காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். இறுதியாக இப்போது அந்தக் கட்சியில் மாநிலத் தலைவராகவும் ஆகி விட்டார்.
இடையில் திருநாவுக்கரசு என்ற பெயரை திருநாவுக்கரசர் எனப் பெயர் மாற்றம் செய்தார். எண் கணிதமோ – பெயரொலியோ – எதனால் பெயர் மாற்றம் செய்தாரோ தெரியவில்லை. ஆனால், அந்தப் பெயர் மாற்ற இராசி இனி வேலை செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல்களை நோக்கி தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் – ஒரு முக்கியமான காலகட்டத்தில் – காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் திருநாவுக்கரசர்.
திமுகவுடன் கூட்டணி தொடருமா – புதிய கூட்டணியை அமைத்து காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்குமா – அல்லது தனியாகவே போட்டியிடுமா – என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், திருநாவுக்கரசரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் – அவரது அரசியல் அணுகுமுறைகள் நிச்சயம் தமிழக அரசியலில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என நம்பலாம்!
-இரா.முத்தரசன்