Home Featured தொழில் நுட்பம் ஐஓஎஸ் 10 வெளியீடு கண்டது – புதிய அம்சங்கள் ஒரு பார்வை!

ஐஓஎஸ் 10 வெளியீடு கண்டது – புதிய அம்சங்கள் ஒரு பார்வை!

1210
0
SHARE
Ad

muthu-ios10-screens

(இன்று  புதன்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 10 மென்பொருளின் புதிய அம்சங்கள் குறித்து செல்லினம்.காம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை செல்லியல் வாசகர்களுக்காக மறு பதிவேற்றம் செய்கின்றோம்) 

ஆப்பிள் கையடக்கக் கருவிகளுக்கான ஐ.ஓ.எஸ் 10 இயங்குதளம் இன்று புதன்கிழமை  வெளியிடப்பட்டது. கடந்த சூன் மாதம் ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாட்டில்  இந்தப் புத்தம் புதிய பதிப்பு அறிவிக்கப்பட்டது.  பல உற்சாகமூட்டும் புதிய வசதிகளைக் கொண்டு வருகின்றது.  நான்கு ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த ஐ-போன் 5-க்குப் பின்னும் ஐ-பேட் 4-க்குப் பின்னும் வெளிவந்தக் கருவிகளில் இதனை இன்றுமுதல் தறவிறக்கம் செய்யலாம்.

#TamilSchoolmychoice

ஐ.ஓ.எஸ் 10 அறிமுகப்படுத்தும் குறுஞ்செய்தி

பொதுப் பயனர்கள் நேரடியாகப் பார்த்துப் பயன்படுத்தும் வசதிகளில் தலையாயதாகக் கருதப்படுவது ஐ.ஒ.எஸ் 10இல் உள்ள புதிய குறுஞ்செய்திச் செயலி (Messages app). நட்பூடக செய்திச் செயலிகளில் (social messaging apps) அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் வசதிகள் இந்தச் செயலியில் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுப்படங்கள் (stickers), நகர்படங்கள் (animated graphics) போன்ற வசதிகள் மட்டும் அல்லாமல், மேம்பாட்டாளர்களே சிறப்பாக உருவாக்கும் புதிய வடிவங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

muthu-ios-10-article

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல மேம்பாட்டாளர்கள் சேர்க்கைகள் (extensions) வழி, ஐ.ஓ.எஸ் 10 வெளிவரும் அதே வேளையில் வெளியிட்டுள்ளனர். செயலிகளுக்கு அப் இஸ்டோர் (App Store) இருப்பதைப்போல, குறுஞ்செய்தி சேர்க்கைகளுக்காக ஐ-மெசெஜ் (iMessage Store) இஸ்டோர் என்னும் புதிய தளத்தையே ஆப்பிள் நிருவனம் ஏற்படுத்தி உள்ளனர்.

செயலிகளுக்கும் நூல்களுக்கும் தனித்தனியே கடைகள் இருப்பதைப்போல, குறுஞ்செய்தி சேர்க்கைகளுக்குத்  தனியாகக் கடைவிரித்திருப்பது, இந்தச் சேர்க்கைகளுக்கு எவ்வளவு பெரிய சந்தை இருப்பதை ஆப்பிள் நிறுவனத்தினர் காண்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

மூன்றாம் நிலை செயலிகளுக்கும் இனி ‘சீரி’

ஐபோன் 4s கருவியோடு வெளியீடுகண்ட ஆப்பிளின் ‘சீரி’ எனப்படும் குரல்-வழி உதவும் செயலி (voice assistant) ஆப்பிளின் சொந்தச் செயலிகளுக்காகவே இதுவரைப் பயன்பட்டு வந்தது. மூன்றாம் நிலை மேம்பாட்டாளர்கள், இந்தக் குரல்-வழி உதவும் வசதியை அவரவர் செயலிகளில் சேர்ப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலை ஐ.ஓ.எஸ் 10இல் மாறியுள்ளது.  மேம்பாட்டாளர்கள் இதனை பெரிதும் வரவேற்றனர். இனி, ஆப்பிளின் செயலிகள் மட்டுமன்றி, மற்ற மற்றச் செயலிகளையும் குரல் வழி இயக்கவும், தகவல் பெறவும் வாய்ப்பமையும்.

அறிவிக்கை மைய மேம்பாடுகள்

அறிவிக்கைகளைத் (notifications) திறப்பதற்கும் அவை வழங்கும் செய்திகளை உடனுக்குடன் பெறுவதற்கும் செயல்களை எளிமையாகச் செயல்படுத்துவதற்கும் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோனைத் தூக்கிப் பார்த்தாலே இந்த அறிவிக்கைகள் திரையில் தோன்றும். இதற்காக பூட்டப்பட்டத் திரையைத் திறக்க வேண்டியதில்லை. மேலும் 3டி-டச் எனப்படும் அழுத்த வசதி உள்ள ஐபோன்களில் அறிவிக்கைகளைச் சற்றே அழுத்தி பல செயல்பாடுகளைச் செய்யலாம். அந்தந்தச் செயலிக்கேற்றவாறு இந்தச் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.

மேலும் பல மேம்பாடுகள்

இவற்றைத் தவிர, வரைபடம் (Maps), நிழற்படங்கள் (Photos), வீட்டில் உள்ள மின்கருவிகளை இயக்கும் செயலி (Home) முதலிய பல மேம்பாடுகளையும் புதிய செயலிகளையும் இந்தப் பதிப்பு அறிமுகம் செய்கிறது.

ஐ.ஓ.எஸ் 10இல் தமிழ்

இணைமதி என்னும் அழகான தமிழ் எழுத்துருவும் ஐ.ஓ.எசின் 7ஆம் பதிப்பு முதல் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் விசைமுகங்களும் இந்தப்பதிப்பில் சிறப்பாகவே இயங்குகின்றன. ஐபேட்-புரோ கருவியோடு இயங்கும் புளூதூத் விசைப்பலகையும் தமிழில் உள்ளிட பயன்படுகிறது.

கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளிடு செய்யும் குறுஞ்செயலியான செல்லினமும் ஐ.ஓ.எஸ் 10க்காக ஓரிரு மேம்பாடுகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

குறிப்பு: ஆப்பிளின் ஐஓஎஸ் 10 குறித்த அம்சங்களின் ஆங்கில உள்ளடக்கத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்

http://www.apple.com/newsroom/2016/06/apple-previews-ios-10-biggest-ios-release-ever.html