Home Featured தொழில் நுட்பம் திறன்பேசிகளில் தமிழ் உள்ளீடு: சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை!

திறன்பேசிகளில் தமிழ் உள்ளீடு: சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை!

1020
0
SHARE
Ad

muthu-nedumaran-chennai-talk-12-sep-2016

சென்னை – கடந்த வாரம் இந்தியாவுக்கு தொழில் காரணமாக வருகை மேற்கொண்டிருந்த  மலேசியாவின் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன்  கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், கையடக்கத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் புதிய மேம்பாடுகள் குறித்து சிறப்புரை ஒன்றை வழங்கினார்.

முன்னதாக, மும்பை ஐஐடியிலும் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முத்து நெடுமாறன் சிறப்புரை ஒன்றை அந்தப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார்.

#TamilSchoolmychoice

முத்து நெடுமாறன் முரசு, செல்லியல் நிறுவனங்களின் தோற்றுநர் என்பதோடு அவற்றின் தலைமைத் தொழில்நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.

கையடக்க கணினி மற்றும் திறன் பேசிகளில் தமிழ் உள்ளீடு குறித்து முத்து நெடுமாறனின் உரை மையம் கொண்டிருந்தது. பின்னர் கலந்துரையாடலும் நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக் கழக கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் செய்தியாளர்கள், தமிழ் மொழி மற்றும் கணினி ஆர்வலர்கள், கணினித் துறை மாணவர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

muthu-nedumaran-malaysians-chennai-virtual-academy

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசிய நண்பர்களுடன் முத்து நெடுமாறன்..

துரை. மணிவண்ணன், நாநா, என்எச்எம் ரைட்டர் நிர்வாக குழுவினர், ஓம் தமிழ் செயலி நிறுவனர் முகிலன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரையாடினர்.

தமிழ் இணைய மாநாட்டிற்காக தமிழகம் வந்திருந்த மலேசிய அன்பர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முத்து நெடுமாறனின் விளக்கம்

தமிழ் தட்டெழுத்து செயல்முறைகளின் விளக்கத்தினையும் தற்போது உள்ள நவீன முறைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. புதிய தமிழ் புதிர் செயலி ஒன்றின் செயல்முறை விளக்கமும் முன்னோட்டக் காட்சியும் காட்டப்பட்டது.

திறன் பேசிகளில் தமிழ் உள்ளீடு குறித்து  பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், ஐயப்பாடுகளுக்கும் முத்து நெடுமாறன் தனது உரைக்குப் பின்னர் விளக்கங்கள் தந்தார்.

‘புளூ தூத்’ விசைப் பலகைகளைப் போன்ற வெளிக்கருவிகளைப் பயன்படுத்தி விரைவு தட்டச்சினை மேம்படுத்துவது குறித்தும், சொல் தேர்வு குறித்தும் உற்சாகமான, விரிவான விவாதங்கள் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றன.

செல்லினத்தில் பரிந்துரைகளாக வழங்கப்படும் சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தனித்தமிழ்ச் சொற்களை முன்மொழியவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

muthu-nedumaran-chennai-talk-participantsமுத்து நெடுமாறனின் உரைக்குப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின்போது…

முத்து நெடுமாறனின் இந்த உரை நிகழ்ச்சி, கணித்தமிழ்ப் பேரவை முகநூல் பக்கத்தில் நேரலையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் தமிழ் இணையக் கல்விக் கழக வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள தொழில்நுட்ப மற்றும் கணினி ஆர்வலர்கள் மட்டுமன்றி, ஊடகங்களின் கவனத்தையும் இந்த நிகழ்ச்சி ஈர்த்திருந்தது.

புதிய தலைமுறை, சத்யம், நியூஸ் 7 தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியினை பற்றி செய்திக் குறிப்புகளை வெளியிட்டன. மேலும், நிகழ்ச்சி குறித்து தமிழ் இந்து நாளிதழ் மற்றும் தினகரன், வசந்தம் ஆகிய செய்தித்தாள் ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டிருந்தன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முத்துநெடுமாறனுக்கு சிறப்பு செய்யப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முனைவர் தனலட்சுமி வரவேற்புரையாற்ற, நிகழ்ச்சியின் நோக்கவுரையை  முனைவர் மா. தமிழ்ப்பரிதி நிகழ்த்தினார்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சிவ.தினகரன் நன்றியுரை வழங்கினார்.