Home Featured நாடு அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!

அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!

1235
0
SHARE
Ad

najib-zahid-combo

கோலாலம்பூர் – அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது அளித்திருந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் மலேசியாவில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் முடிவுறும் 2018-ஆம் ஆண்டில்தான் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் தயாராகி வரும் வேகத்தைப் பார்த்தால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களைக் கண்ணோட்டமிட்டால், பொதுத் தேர்தல் எப்படியும் அடுத்த ஆண்டு நடைபெறும் எனத் தெரிகின்றது.

BN Logoதேசிய முன்னணி கட்சிகள் இப்போதே தங்களின் தொகுதிகளை அடையாளம் காணவும், சில தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ளவும், பேச்சு வார்த்தையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன என தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அன்வார் விடுதலை காரணமா?

தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான முக்கியக் காரணம் தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் விடுதலையாகும்.

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து அவர் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்துள்ள மறு ஆய்வு முறையீடு இந்த மாதம் விசாரணைக்கு வருகின்றது.

ANWAR IBRAHIM_INTERVIEWஇந்த விசாரணையின் இறுதியில் அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால், அன்வார்-மகாதீர்-மொகிதின் இணைந்த வலுவான கூட்டணி, தங்களின் பிரச்சாரங்களின் பலம் பெறுவதற்கு முன்பாகவே பொதுத் தேர்தலை நடத்திவிட தேசிய முன்னணி திட்டமிடுகின்றது.

அப்படியே அன்வாரின் மேல்முறையீடு தோல்வி கண்டாலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள்  அவரது சிறைவாசம் முடிவுக்கு வந்து விடும். கடந்த 2014ஆம் ஆண்டில்,  5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அன்வார், அதில் மூன்றில் ஒரு பகுதியை பொதுவாக, சிறப்பு சலுகையாக எல்லா சிறைக் கைதிகளையும் போல பெறக் கூடும். அதன்படி பார்த்தால் அவர் 40 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

அந்த 40 மாத சிறைவாசம் அடுத்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும். அதன்பின்னர் அவர், சிறைக்கு வெளியே வந்து, பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சாரங்களை முடுக்கிவிட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என அம்னோ தரப்பு வட்டாரங்கள் நினைக்கின்றன.

எனவே, அன்வாரின் விடுதலைக்கு முன்பாகவே, பொதுத் தேர்தலை நடத்திவிட தேசிய முன்னணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மொகிதின்-ஷாபி அப்டால் கட்சிகள் வளரவிடக் கூடாது

Shafie - Apdal - Muhyiddin - Yassin

இன்னொரு கோணத்தில், ஷாபி அப்டால் சபாவில் அமைத்துள்ள புதிய கட்சி வளர்வதற்கும், சபாவில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களால் தேசிய முன்னணி அங்கு பாதிப்படையாமல் இருக்கவும் தேசிய முன்னணி கடுமையாகப் பாடுபட வேண்டியுள்ளது.

சபா மாநிலத்தில் வழக்கமாக அதிகமான தொகுதிகளை வென்று வந்துள்ள அம்னோவும், தேசிய முன்னணியும் இந்த முறை அங்கு நிலவும், உள்நாட்டுக் கட்சிகள் மீதான ஆதரவு அலைகளினால் பெருமளவில் பாதிக்கப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அந்த ஆதரவு அலையில் முன்னின்று, சபா அரசியலை அனுபவம் மிக்க ‌ முன்னாள் அம்னோ உதவித் தலைவரான ஷாபி அப்டால் தனது புதிய கட்சியின் மூலம் வழி நடத்துவார்.

அதே சமயத்தில், தீபகற்ப மலேசியாவில் மகாதீர்-மொகிதின் இணைந்த புதிய பெர்சாத்து கட்சியும் வலுவாக காலூன்ற விடக் கூடாது, அதற்குள்ளாக பொதுத் தேர்தலை நடத்தி விட வேண்டும் என தேசிய முன்னணி தலைமைத்துவம் திட்டமிடுகின்றது.

தே.மு.தலைவர் நஜிப்பா? சாஹிட்டா?

zahidhamidicitizen1606இந்த சூழ்நிலையில் மற்றொரு முக்கியமான அரசியல் கேள்வியும் பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை நிர்ணயம் செய்யும்.

14-வது பொதுத் தேர்தலை முன்னின்று தலைமையேற்றுவதற்கு நஜிப் உறுதியோடு முடிவெடுத்து விட்டால், மேற்கூறிய காரணங்களால் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டே நடத்தப்பட்டு விடும்.

ஆனால், அவருக்கு எதிராக, அம்னோவிலும், தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிளிடையேயும், எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. அவர் தலைமையேற்றால், தேசிய முன்னணி பொதுத் தேர்தலில் மோசமான தோல்வியைக் காணும் என்ற அரசியல் கண்ணோட்டங்கள் பரவி வருகின்றன.

நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்சே 5 பேரணி அவருக்கு எதிரான மற்றொரு மக்கள் போராட்டமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் அவர் பதவி விலகி, நடப்பு துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி தேசிய முன்னணிக்கும், அம்னோவுக்கும் தலைமையேற்றால் அதன் மூலம், ஓரளவுக்கு தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என சில அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.

ஆக,

நஜிப் தலைமையில் தேசிய முன்னணி 14-வது பொதுத் தேர்தலை சந்தித்தால், அது கண்டிப்பாக அடுத்த ஆண்டே நடைபெற்றுவிடும்.

ஆனால், நஜிப் பதவி விலகி, சாஹிட் அடுத்த பிரதமராகப் பதவியேற்றால், அவருக்கு வேறு மாதிரியான நெருக்குதல்கள் இருக்கும். அதன் காரணமாக, மேலும் ஓராண்டு பதவியில் இருந்து, தனது திட்டங்கள், கொள்கைகள், அரசாங்க உருமாற்றங்கள் ஆகியவற்றை அறிவித்து, தனது பிரதமர் பதவியை நன்கு பலப்படுத்திக் கொண்டு, அதன் பின்னரே பொதுத் தேர்தலைச் சந்திப்பார் என்பதால்,

சாஹிட் 2018-இல்தான் பொதுத் தேர்தலை நடத்துவார்!

-இரா.முத்தரசன்