Home Featured நாடு பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் தீர்மானங்கள்! “இந்து மதக் கல்வி வேண்டும்”

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் தீர்மானங்கள்! “இந்து மதக் கல்வி வேண்டும்”

1098
0
SHARE
Ad

200-yr-tamil-kalvi-teachers-conference

சுங்கைப்பட்டாணி – கடந்த நான்கு நாட்களாக சிறப்பாக நடைபெற்று, இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு கண்ட பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டின் இறுதியில் 10 தீர்மானங்கள் பேராளர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் # 1 – தமிழ் மொழி போதனைக்கு கண்காணிப்பு பிரிவு உருவாக்க வேண்டும்

#TamilSchoolmychoice

பின்னணி: தமிழ் மொழிக் கல்வி மீதிலான கண்காணிப்பிலும்,  கொள்கைகள் அமுலாக்கத்திலும் தொடர்புகள் குறைந்த அளவிலேயே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

நமது நாட்டின் தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பு மற்றும் ஆய்வுகள் தொடர்பில் கொள்கை அமுலாக்கத்திற்காகவும், அதனைக் கண்காணிப்பதற்காகவும், கல்வி துணை அமைச்சர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இரண்டு சிறப்பு தமிழ் அதிகாரிகளைக்  (DG48 -டிஜி 48 – தகுதி கொண்டவர்கள்) கொண்ட ஒரு தனிப் பிரிவை உருவாக்க வேண்டும்.

200-yr-tamil-kalvi-logoதீர்மானம் # 2 – தமிழ் ஆசிரியர்கள் உயர் கல்வி பெறுவதற்கான உபகாரச் சம்பளங்கள்

பின்னணி: தமிழ்க் கல்வி மற்றும் தமிழ் மொழி ஆய்வுகள் மீதான உயர் கல்வியைத் தொடர்வதற்கு, உபகாரச் சம்பளங்கள் மற்றும் போதுமான வாய்ப்புகள் தமிழாசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு:

தீர்மானம்: 

முதுநிலை (மாஸ்டர்ஸ்) மற்றும் முனைவர் பட்டம் (பிஎச்டி) தொடர்பில் வழங்கப்படும் மொத்த உபகாரச் சம்பளங்களில் 7 சதவீதம் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்  கல்வி தொடர்பில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தீர்மானம் # 3 – தமிழ் மொழியில் தொலைதூரக் கல்வி

பின்னணி: தமிழ் மொழியில் பட்டம் பெறாத ஆசிரியர்கள் பட்டம் பெறுவதற்காக நடத்தப்பட்டு வந்த, தொலைதூரக் கல்வித் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால், ஆசிரியர்கள் தமிழ் மொழியில் தங்களின் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

தமிழ் மொழித் துறையில் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டம் மீண்டும் தொடக்கப்பட வேண்டும்.

200-yr-tamil-kalvi-logo

தீர்மானம் 4 – தமிழ்க் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி

பின்னணி: தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை வழங்குவதிலும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதிலும் போதிய வாய்ப்புகள் இல்லை என்பதால்தான் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் திறன் மீதான தரம் நாம் பெருமைப்படத்தக்க அளவுக்கு உயர்வை அடையவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

குறைந்தது 10 தமிழ்ப் பள்ளிகளைக் கொண்டுள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக எஸ்ஐஎஸ்சி (SISC) எனப்படும் பள்ளிகளுக்கான திறன் மேம்பாட்டுக்கான நிபுணத்துவ பயிற்சியாளர்களுக்கான பதவிகளை உருவாக்க வேண்டும்.

தீர்மானம் # 5 – தமிழ் மொழியில் கலைச் சொற்கள் தொகுப்பு

பின்னணி: 21-ஆம் நூற்றாண்டில் கல்வித் துறைகளில், பல முனைகளிலும் துரிதமான  மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்ற சூழலில், தமிழ் மொழியை சிறந்த முறையில் போதிப்பதற்கு, ஒரு முறையான, சரியான சொற்களைக் கொண்ட கலைச் சொல் தொகுப்பு இல்லை என்பது தடைக் கல்லாக இருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

நடப்பு கல்வித் துறையின் பலதரப்பட்ட மேம்பாடுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம், தற்போதுள்ள கலைச் சொற்களை புதுப்பிக்கும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும், புதிய கலைச் சொற்கள் தொகுப்பு ஒன்று பதிப்பிக்கப்பட வேண்டும்.

200-yr-tamil-kalvi-theme

தீர்மானம் # 6 – தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் பயிற்சிகள்

பின்னணி: தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களில் பலர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் மலாய் மொழியில் பயிற்சி பெற்ற காரணத்தால், தமிழ் மொழி தவிர்த்த மற்ற பாடங்களை தமிழ் மொழியில் போதிக்க அவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் தமிழ் மொழி, ஆங்கிலம், மலாய் மொழி தவிர்த்த மற்ற பாடங்களை தமிழ் மொழியில் திறம்பட போதிப்பதற்காக, அவர்களுக்கு தமிழ் மொழியில் அந்தப் பாடங்களை போதிப்பதற்கான பணிக்கு முந்திய தீவிரமான சிறப்பு பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்

தீர்மானம் # 7 – லைனஸ் தமிழ் மொழி ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்

பின்னணி: தமிழ் மொழியில் சரளமாக எழுத்துக் கூட்டிப் படிப்பதற்கு மாணவர்கள் சிரமங்களையும், பிரச்சனைகளையும் எதிர்நோக்குவதற்குக் காரணம் முறையான லைனஸ் (LINUS) ஆசிரியர்கள், அதாவது எண் மற்றும் எழுத்தறி திட்டங்களின் கீழ் போதிக்கும்  ஆசிரியர்கள் பற்றாக்குறைதான் என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

தமிழ் மொழி போதனைகளுக்கான லைனஸ் (LINUS) ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்.

தீர்மானம் # 8 – இந்து சமய அடிப்படையிலான நன்னெறிக் கல்வி

பின்னணி: தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்கள். ஆனால் அவர்கள், இந்து மதம் தொடர்பான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் அவர்களிடையே சில ஒழுக்க சீர்கேடுகள் ஏற்படுவதற்கான  காரணங்களுள் ஒன்று என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

விருப்பம் தெரிவிக்கின்ற தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களுக்காக இந்து மதக் கல்வி, ஒரு பாடமாக போதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்

தீர்மானம் # 9 –  ஆண்டுதோறும் தமிழாசிரியர்களுக்கான மாநாடு

பின்னணி: தமிழாசிரியர்களிடத்தில் நிபுணத்துவ முன்னேற்றம் ஏற்படுவதற்கும், அவர்களிடையே அறிவாற்றலை பரிமாறிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

21-ஆம் நூற்றாண்டுக்கான தமிழ்க் கல்வி மீதான இத்தகைய தமிழாசிரியர்களுக்கான மாநாடுகள், மலேசியக் கல்வி அமைச்சால் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.

தீர்மானம் # 10: தமிழ்ப் பள்ளிகளில் பாலர் வகுப்புகள்

பின்னணி:  தமிழ்ப் பள்ளிகளில் பாலர் வகுப்புகள் மிகக் குறைவாக இருப்பது தமிழ் மொழியை போதிப்பதற்கும், மாணவர்கள் தமிழ் மொழியை படிப்பதற்கும் சிரமங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் கவனத்தில் கொண்டு;

தீர்மானம்:

தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கையை மேலும் கூடுதலாக உயர்த்த வேண்டும்.