கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்தி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் உள்ளிட்ட தலைவர்கள் போல், நஜிப்பும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோரும் எவ்வளவு வருமான வரி செலுத்தினார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிப்பார்களா? என்று ஜசெக கம்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோ சங் சென் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப் பூர்வமான அசலினா பதிலளித்துள்ளார்.
தொண்டு நிறுவனங்களுக்கு நஜிப்பும், அவரது மனைவியும் ஆற்றிய பங்களிப்பை பொதுவில் அறிவிப்பார்களா? என்றும் டாக்டர் கோ கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அசலினா அளித்துள்ள பதிலில், “உள்நாட்டு வருவாய் வாரியத்தின் கணக்கீட்டின் படி, நஜிப் தனது வருமான வரியை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் செலுத்தி வருகின்றார். தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் பங்களிப்பு என்பது எந்த ஒரு தலைவருக்கும் அது தனியுரிமை” என்று அசலினா குறிப்பிட்டுள்ளார்.