டோக்கியோ – ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பை ஏற்று, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு ஜப்பான் – மலேசியா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
அதே வேளையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஜப்பான் தொழிலதிபர்களையும் சந்தித்து அவர்களின் தொழில் தொடர்பான நுணுக்கங்கள் குறித்து கலந்தாலோசித்தார்.
இச்சந்திப்பில் மலேசியா – சிங்கப்பூர் இடையிலான இரயில் சேவைத் திட்டத்தை ஜப்பான் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் முடிவையும், ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது நஜிப் வெளியிட்டுள்ளார்.
இந்த ஏலம் மிகவும் வெளிப்படையாக இருக்கும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார். அதனை ஜப்பானும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று புதன்கிழமை இரவு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும், அவரது துணைவியாரும் அளித்த இரவு விருந்தில் பிரதமர் நஜிப்பும், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரும் கலந்து கொண்டனர்.