Home Featured நாடு மரியா சின் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்!

மரியா சின் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்!

1163
0
SHARE
Ad

Maria

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை, பெர்சே 5.0 பேரணிக்கு ஒரு நாளுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட மரியா சின் மேலும் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் எரிக் பால்சன் தெரிவித்துள்ளார்.

2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மரியா, எங்கு காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது காவல் துறையினரால் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் மரியாவின் குடும்பத்தினர் அவரைப் பார்க்க இன்று அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்தினரைச் சந்திப்பதற்க்காக மரியா டாங் வாங்கி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.

Sivarasa ஆர்.சிவராசா…

மரியாவின் குடும்பத்தினருடன் சந்திப்பு நடத்திய வேளையில் வழக்கறிஞர்கள் அம்பிகா சீனிவாசன், எரிக் பால்சன், ஆர்.சிவராசா ஆகியோரும் உடனிருந்தனர்.

மரியா உற்சாகத்துடன் இருக்கிறார்

மரியா களைப்புற்று இருப்பதாகவும் இருந்தாலும் உற்சாகத்துடன் காணப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் அவருக்கு உணவு கொண்டு வர அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதைச் சாப்பிடுவதற்கான ஆர்வத்தில் அவர் இல்லை. இருப்பினும் அவரது உற்சாகம் குறையவில்லை. போராட்டத்தைத் தொடருமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார்” என அவரைச் சந்தித்த அவரது தங்கை சிந்தியா தெரிவித்துள்ளார்.

மரியாவுடன் அவரது குடும்பத்தினர் சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியாவின் தங்கை சிந்தியாவோடு மரியாவின் தந்தை மற்றும் மரியாவின் மூன்று மகன்களும் அவரைச் சந்தித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மரியாவுடனான அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மரியாவின் வழக்கறிஞரான சிவராசா, மரியா சின் தனியான ஓர் அறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு ஜன்னல்கள் இல்லை என்றும், விளக்குகள் மட்டுமே உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

பெர்சே வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், சீர்திருத்தங்கள் மீதான போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும், தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்துப் போராடப் போவதாகவும் மரியா உறுதியுடன் கூறியுள்ளதாக, அவரது மற்றொரு வழக்கறிஞரான எரிக் பால்சன் கூறியுள்ளார்.

சொஸ்மாவின் கீழ் ஒருவரை காவல் துறையினர் 28 நாட்கள் வரை காவலில் வைக்க முடியும் என்பதோடு, முதல் இரண்டு நாட்களுக்கு அவர்களுக்கு சட்ட ஆலோசனை பெறவும் அனுமதி கிடையாது.

15 அடிக்கு, 8 அடி சுற்றளவு கொண்ட, ஜன்னல்கள் இல்லாத அறையில் மரியா தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு படுக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் 2 விளக்குகள் 24 மணி நேரமும் அந்த அறையில் எரிந்து கொண்டிருப்பதாகவும் பெர்சே தெரிவித்துள்ளது. இது போன்ற சிறைச் சூழல்கள் முன்பிருந்த ஐஎஸ்ஏ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட சிறைச் சூழல்களுக்கு நிகரானது என்றும் பெர்சே 2.0 தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் மரியாவுக்கு பதிலாக ஷாருல் அமான் முகமட் சாரி பெர்சேயின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.