ஈப்போ – பெர்சே போன்ற பேரணிகளை நிறுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மீண்டும் ஐஎஸ்ஏ என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாக மைபிபிபி தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கூறியுள்ளார்.
இன்று ஈப்போவில் நடைபெற்ற பேராக் மாநில மைபிபிபி கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, கேவியஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜசெக, பிகேஆர் போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் பெர்சே தனித்து நின்று இயங்க முடியுமா என்றும் கேவியஸ் சவால் விட்டுள்ளார். தங்களின் போராட்டத்திற்கு ஏன் அவர்கள் எதிர்க்கட்சிகளை நாட வேண்டும் என்றும் அவர் கேள்வி தொடுத்துள்ளார்.
“அவ்வாறு அவர்கள் தனித்து நின்று இயங்கினால் மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்கிறதா என்றும் பார்ப்போம். அப்படி மக்களும் அவர்களை ஆதரித்தால், அப்போது நானும் அவர்களோடு இணைந்து கொள்வேன்” என்றும் கேவியஸ் தெரிவித்துள்ளார்.
பெர்சே எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படுவதால் அவர்கள் எதிர்க்கட்சிகளின் இன்னொரு அங்கமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
பெர்சே, பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள் என்றும் வர்ணித்திருக்கும் கேவியஸ், பெர்சே போன்ற பேரணிகளைக் கட்டுப்படுத்த தனது கட்சியான மைபிபிபி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தும் என்றும் அதன் மூலம் இதுபோன்ற பேரணிகளை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கும் என்றும் மேலும் கூறியுள்ளார்.