Home Featured நாடு ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் மசோதா – இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு!

ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் மசோதா – இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு!

277
0
SHARE

mhdmகோலாலம்பூர் – ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் மசோதாவிற்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

“மலேசிய இந்துக்கள் எதிர்நோக்கும் நீண்டகால சர்ச்சைக்குரிய மதமாற்ற உரிமையிழப்பு பிரச்சனை தொடர்கதையாகவே உள்ளது.”

“தம்பதிகளுள் கணவரோ மனைவியோ இஸ்லாம் மதத்தைத் தழுவும் பொழுது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு உட்பட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, யாவரும் அறிந்த ஈப்போவைச் சேர்ந்த திருமதி.இந்திரா காந்தி அவர்களின் வழக்கு இதில்  குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோரில் தாய் அல்லது தந்தை மதம் மாறுகின்ற வேளையில், அவர்களுள் ஒருவர் மற்றொருவரின் ஒப்புதலின்றி 18 வயதுக்குக் குறைந்த தங்கள் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதால் ஏற்படும் உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.”

“இந்துவாகவே வாழ்ந்த ஒருவர் இறந்தவுடன், அவர் முஸ்லீம் என அடையாளம் காட்டப்பட்டு அவருடைய உடல் கையகப்படுத்தப்படும் செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.”

radhaji“இந்து இளைஞர்கள் காதல்வயப்பட்டு முஸ்லீம்களாக மதம் மாறி இஸ்லாமியப் பெண்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர். பின்னர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்புவதற்கான முயற்சியில் ஈடுபடும் இவர்கள் நாட்டின் ஷரியா (இஸ்லாமிய) சட்டச்சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.”

“ஓர் இந்து இஸ்லாம் மதத்தைத் தழுவும் போது, இந்துவாக உள்ள அவருடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய சொத்துக்களின் மீதான உரிமைகளை இழக்க நேரிடுகிறது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாட்டிலுள்ள பிரதான சமய இயக்கங்களோடு இணைந்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் சட்ட ரீதியாகவும் மற்ற அணுகுமுறைகளின் வழியும் தீர்வுகண்டு வருகின்றது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திட்டத்திலும் மாநில அரசுகளின் இஸ்லாமிய சட்டத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டுவருவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது பயனளிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால்தான் மாமன்றம் தொடர்ந்து அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று பலமுறை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது .”

“இஸ்லாம் அல்லாதவர்கள் நடப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் புரிந்துக் கொள்ளும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் மதம் மாறுவதால் ஏற்படும் மணவிலக்கு, குழந்தைகள் பராமரிப்பு தொர்பான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சட்டதிட்டங்களை பரிந்துரைக்கும் மசோதா தாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த அனைவருக்கும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.”

“இதன் மூலம் மதமாற்றத்தால் நம் மலேசிய திருநாட்டில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தாக்கல் செய்யப்படும் மசோதாவை எந்த ஒரு மாற்றமும் இன்றி இச்சட்டத்திட்ட மாற்றங்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்து சமூகத்தின் கோரிக்கையையும் பெரும் எதிர்பார்ப்பையும் மலேசிய இந்துதர்ம மாமன்றம்  முன்வைக்கிறது.”

“மேலும் இச்சட்டத்திருத்த மசோதா குழுவில் நியமிக்கப்பட்ட டத்தோ நான்சி சுக்ரி , டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் , டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய், டான்ஸ்ரீ ஜோசப் குருப் ஆகியோருக்கும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முற்பட்ட பிரதமருக்கும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் தனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.”

“அரசு நீதித்துறையின் தயவினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த சட்ட மசோதா இஸ்லாம் அல்லாதோர் சிவில் சட்டத்திட்டத்தின்படி திருமணம் புரிந்திருந்தால், அவர்கள் இஸ்லாம் முறைப்படி திருமணம் புரிந்துகொள்வதற்கு முன்னர்,  முதலில் தங்களின் மணமுறிவை சிவில் நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்வதை உறுதி செய்யும் திருமணச் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெரிதும் வரவேற்கின்றது. இதன்வழி ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்படும் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் தீர்வுகாண முடியும் என்பது திண்ணம்.”

“இந்தச் சட்டத்திட்ட மாற்றம் தற்சமயம் நடப்பிலுள்ள வழக்குகளுக்கும் தீர்வாக அமைவதற்கு அரசும் நீதித்துறையும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று மலேசிய இந்துதர்ம மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.” – இவ்வாறு அப்பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இச்சட்டத்திட்ட மாற்றம் பிரதமரின் ஒரே மலேசியா கொள்கையைப் பிரதிபலிப்பதாக அமைவதால், இந்து சமயத்தினர் இம்முயற்சிக்கு நல்லாதரவு வழங்குவார்கள் என உறுதியளிப்பதாகவும் மலேசிய இந்துதர்ம மாமன்ற தேசியத்தலைவர் திரு.அ.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

Comments