Home Featured நாடு விரைவில் பொதுத் தேர்தல்: நஜிப் அணுகுமுறை வெற்றியைத் தருமா? 

விரைவில் பொதுத் தேர்தல்: நஜிப் அணுகுமுறை வெற்றியைத் தருமா? 

808
0
SHARE
Ad

najib-umno-general-assembly-2016

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை அம்னோ பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 14-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுமெனக் கோடி காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய கடைசி பொதுப் பேரவையாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அம்னோ பேரவை இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அடுத்த பொதுத் தேர்தல், அம்னோவை மையமாகக் கொண்ட தேசிய முன்னணியின் தலைமையில் மலரப் போகும் மத்திய அரசாங்கமா அல்லது ஜசெகவை மையமாகக் கொண்ட அரசாங்கமா என்பதை உறுதிப்படுத்தும் என்றும் நஜிப் தான் ஆற்றிய ஆவேச உரையில் குறிப்பிட்டார்.

புதிய அரசியல் வியூக அணுகுமுறை வெற்றியைத் தருமா?

Logo-BNஇருப்பினும், நஜிப்பின் இந்த அணுகுமுறை வாக்காளர்களிடையே வரவேற்பைப் பெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

காரணம், சீனர்களால் நாடு ஆளப்பட்டு விடும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நஜிப் முயன்று வருகின்றார் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அண்மையில் சீனா சென்று, பல கோடி ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்களை சீனாவுக்கு அவர் வாரி வழங்கியுள்ள காரணத்தால் அவர் மீதான கண்டனங்களும் பெருகியுள்ளன.

ஒருபுறத்தில் சீனாவில் உள்ள சீனர்களுக்கு திட்டங்களை வாரி வழங்கிவிட்டு, அவர்கள் பொருளாதார ரீதியாக மலேசியாவில் ஆதிக்கம் செலுத்த வழி ஏற்படுத்திவிட்டு, இன்னொரு புறத்தில் இங்கு உள்நாட்டில் சீனர்கள் தலைமையிலான அரசியல் மாற்றம் ஏற்பட்டு விடும் என அவர் கூறிவருவது வாக்காளர்களிடையே அவரது இரட்டை அணுகுமுறையை எடுத்துக் காட்டியுள்ளது. ஆனால் அவரது இந்த அணுகுமுறை அம்னோ-தேசிய முன்னணிக்கு ஆதரவான வாக்குகளாக மாறுமா என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள்தான் தெளிவாகக் காட்ட முடியும்.

அம்னோ தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தால் மலாய்க்காரர்களுக்கு பயங்கரக் கனவுகளுடன் கூடிய இருண்ட காலமே கிடைக்கும் எனவும் நஜிப் தனது அம்னோ பொதுப் பேரவை உரையில் எச்சரித்துள்ளார்.

2018-இல்தான் பொதுத் தேர்தல் நடைபெறும் – இன்னொரு கோணம்

bersih-5-bannerஇன்னொரு கோணத்தில் பார்த்தால், அண்மையில் நடந்து முடிந்த பெர்சே பேரணி, மரியா சின்னின் கைது நடவடிக்கையால் அரசாங்கத்திற்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகள் ஆகியவற்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பில்லை என்றும், 2018 மே மாதம் வரை நடப்பு அரசாங்கம் நீடிக்கும் எனவும் சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

முன்கூட்டியே தேர்தல் என அறிவிப்பதன் மூலம், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் என்ன, அவர்கள் பொதுத் தேர்தல் குறித்து எவ்வாறு அணுகுகின்றார்கள் என்பது போன்ற வியூகங்களை அறிந்து கொள்ளும் விதத்தில்தான், நஜிப் விரைவில் பொதுத் தேர்தல் என எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளார் என்றும் கருதப்படுகின்றது.

இரண்டு முக்கிய அம்சங்கள் – முடிவுகள் – தெளிவாகும்வரை தேசிய முன்னணி அரசாங்கம் பொதுத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாஸ் எந்தப் பக்கம்?  

pas-umno-logo-
முதலாவது, தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் தொகுதி எல்லை மற்றும் வாக்காளர் தொகுதி மாற்றங்கள் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த தொகுதி வாக்காளர் மாற்றங்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கும்படும் வரை பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகாது என கருதப்படுகின்றது.

அடுத்து, மிகவும் மோசமான முறையில் நஜிப்பின் செல்வாக்கு உள்நாட்டிலும்,  அனைத்துலக ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்னோ 14-வது பொதுத் தேர்தல் வெற்றிக்காக அம்னோ எதிர்பார்ப்பது – சார்ந்திருப்பது – பாஸ் கட்சி, அம்னோவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்குமா என்ற முடிவுதான்.

எனவே, பாஸ் கட்சி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணையாமல் தனித்துப் போட்டியிடுமா, அல்லது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் மகாதீர் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணையுமா, அல்லது அம்னோவுடன் இணையுமா என்பது போன்ற முடிவுகளை வைத்துத்தான் பொதுத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவையெல்லாம், நிர்ணயிக்கப்படாதவரை பொதுத் தேர்தலுக்கான தேதியை நஜிப்பும் அறிவிக்க மாட்டார் என்றே கருதப்படுகின்றது.

இருப்பினும், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில், தனது அம்னோ பொதுப் பேரவை உரையின் மூலம் பொதுத் தேர்தல் குறித்த சூடான விவாதங்களை நஜிப் தொடக்கி வைத்து விட்டார்.

-இரா.முத்தரசன்