கோலாலம்பூர் – தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தொகுதி எல்லை மற்றும் வாக்காளர்கள் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கான சீராய்வு மனுவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான விசாரணைகளுக்கும், விளக்கக் கூட்டங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, வழக்கறிஞர்கள் அம்பிகா சீனிவாசன், சைரஸ்தாஸ், மற்றும் மற்ற வழக்கறிஞர்களுடன்…(படம்: நன்றி – அஸ்மின் அலி டுவிட்டர் தளம்)
அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான முழு விசாரணை நடைபெறும் வரையில் இன்று வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருந்து வரும்.
சிலாங்கூர் அரசின் சார்பில் அம்பிகா சீனிவாசன் வழக்கறிஞராக பிரதிநிதித்து இந்த வழக்கில் வாதாடினார்.
சிலாங்கூர் மாநில அரசின் விண்ணப்பத்திற்கு அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து எந்த ஆட்சேபணையும் எழுப்பப்படவில்லை என்றும் அதன் காரணமாகவே சீராய்வு மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும் அம்பிகா நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான இந்த தடையுத்தரவு சிலாங்கூர் மாநிலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றாலும், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இது ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது. காரணம், இந்த வழக்கின் மூலம், தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை சீரமைப்பும் வாக்காளர் தொகுதி மாற்றமும் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தொகுதி எல்லை மாற்றங்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் சிபாரிசுகள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் வரை தேசிய முன்னணி அரசாங்கம் 14-வது பொதுத் தேர்தலை அறிவிக்காது என்றும் கருதப்படுகின்றது.
காரணம், தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தொகுதி எல்லை சீரமைப்புகள் தேசிய முன்னணிக்கு ஆதரவாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.