பேங்காக் – 100 கிலோ அளவுள்ள ஹெரோயின் மற்றும் மெட்டம்பெட்டாமின் என்ற போதைப் பொருளுடன் இரண்டு மலேசியர்கள் தென் தாய்லாந்தில் சும்போன் என்ற இடத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இருவரும் 44 மற்றும் 46 வயது கொண்டவர்களாவர். காவல் துறையினரின் பரிசோதனைகள் அதிக அளவில் இருக்காது, சுலபமாக சோதனைகளைக் கடந்து போய்விடலாம் எனக் கருதி ஒரு நாள் அதிகாலையில் அவர்கள் காரின் மூலம் அந்தப் போதைப் பொருளைக் கடத்திக் கொண்டு வரும்போது பிடிபட்டனர்.
பேங்காக்கிலிருந்து கார் மூலம் வந்த அவர்கள் தென்தாய்லாந்து நகரான ஹட்ஜாய் நோக்கி வந்து கொண்டிருந்தபோது டிசம்பர் 11-ஆம் தேதி அதிகாலை 8.00 மணியளவில் சும்போன் என்ற இடத்தில் அவர்கள் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹட்ஜாயிலிருந்து சில மணி தூரங்கள் பயணத் தொலைவில் சும்போன் என்ற இடம் இருக்கின்றது.
இரவு முழுவதும் பணியில் இருந்த காரணத்தால் காவல் துறையினர் களைத்து, சோர்ந்து போய் இருப்பார்கள், அதனால் காரைச் சோதனையிட மாட்டார்கள் என கடத்தல்காரர்கள் கணக்கிட்டு அதிகாலை நேரத்தை தங்களின் பயணத்திற்குத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
ஆனாலும், அவர்களின் நடுக்கத்தையும், தடுமாற்றத்தையும் கண்டு சந்தேகம் கொண்ட தாய்லாந்து காவல் துறையினர் காரைச் சோதனையிட்டதில், 140 பொட்டலங்களாகக் கட்டப்பட்ட 52.4 கிலோ எடை கொண்ட ஹெரோயினையும், 41 கிலோ எடை கொண்ட “கிரிஸ்டல் மெட்டம்பெட்டாமின்” என்ற போதைப் பொருளையும் காரின் உட்பகுதியில் உள்ள பெட்டகத்தில் கண்டெடுத்தனர்.
மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்பு கொண்ட அந்த போதைப் பொருள் ஹட்ஜாயில் ஒருவரிடம் கொடுக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து பினாங்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக தாய்லாந்து காவல் துறையினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரின் செல்பேசிகளிலும் அவர்கள் தொடர்பு கொண்டிருந்த பினாங்கு நபர்களின் எண்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருக்கும் இருவரின் நண்பர்கள் போதைப் பொருள் கும்பலால் பினாங்கில் பிணை பிடிக்கப்பட்டு, கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் செல்பேசிகளின் வழியாக கைது செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடத்தல் வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்காத காரணத்திற்காக அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாக இது கருதப்படுகின்றது.
நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை சிறைவாசம் கிடைக்கும்.