Home Featured நாடு இருமொழித் திட்டம்: ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன?

இருமொழித் திட்டம்: ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன?

836
0
SHARE
Ad

dlp-dual-language-logo_full

கோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளிலும், சீனப் பள்ளிகளிலும் பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இருமொழித் திட்டத்திற்கு நாடெங்கிலுமிருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில், இந்தத் திட்டத்திற்கான ஆதரவுக் குரல்களும் ஆங்காங்கு ஒலித்து வருகின்றன.

கிள்ளான் பள்ளத்தாக்கில் தமிழ் ஆர்வலர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, இருமொழித் திட்டத்தின் அறிமுகத்தால் தமிழ்ப் பள்ளிகளும், தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்களும் எவ்வாறு பயன்பெறுவர், எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி முறை எந்த வகையில் இந்தத் திட்டத்தால் மேம்படும் என்பது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு, அந்த ஆய்வுகளை நட்பு ஊடகங்களில் (Social media) அவர்கள் வெளியிட்டும் வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இருமொழித் திட்டத்திற்கு ஒரு சில தரப்புகள் கூறுவதுபோல், ஒரே ஒரு சீனப் பள்ளிதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற கூற்று உண்மையல்ல – மாறாக, 380-க்கும் மேற்பட்ட சீனப்பள்ளிகள் பரிட்சார்த்த முறையில் இருமொழித் திட்டத்தில் பங்கு கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

தமிழ்ப் பள்ளிகளில் 49 பள்ளிகள் இந்த பரிட்சார்த்தத் திட்டத்தில் இடம் பெறும் என்றாலும், எத்தனை சீனப் பள்ளிகள் இந்தத் திட்டத்தின் பரிட்சார்த்த முறையிலான அமுலாக்கத்திற்கு ஒப்புதல் தந்துள்ளன என்பதும் இதுவரையில் உறுதியாகத் தெரியவில்லை.

இருமொழித் திட்டத்திற்கான ஆதரவு வாதங்கள் என்ன?

முதலாவதாக வைக்கப்படும் ஆதரவு வாதம், இந்தத் திட்டம் இறுதி முடிவல்ல – மாறாக பரிட்சார்த்த முறையிலான ஒரு திட்டமே என்பதாகும். எனவே, இந்தத் திட்டத்திற்கு ஒரு வாய்ப்பளிக்காமல் – செயல்படுத்திப் பார்க்கும்போது அதனால் ஏற்படக் கூடிய சாதக, பாதகங்கள் என்ன என்பதை அனுபவ பூர்வமாக நிரூபிக்காமல், வெறுமனே எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் – வேண்டாம் என்று வாதிடுவதும், நியாயமானதல்ல என்கின்றனர் இருமொழித் திட்டத்தின் ஆதரவாளர்கள்.

parent-action-group-for-educationகல்விக்கான பெற்றோர் செயல் நடவடிக்கைக் குழுவின் (Parent Action Group for Education – PAGE) தலைவர் டத்தின் நூர் அசிமா அப்துல் ரஹிம் என்பவர் அண்மையில் பிரி மலேசியா டுடே இணையத் தள ஊடகத்திற்கு வழங்கியுள்ள செய்தியில், இந்தத் திட்டம் யார் மீதும் திணிக்கப்படவில்லை என்றும், விருப்பத் தேர்வு என்பதால் வேண்டாதவர்கள் இதனைப் பின்பற்ற வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வெளியிட்டிருக்கும் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ள நூர் அசிமா “இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட வேண்டுமென இராமசாமி கூறியிருப்பது பெற்றோர்களை அவமதிப்பதாகும். காரணம் இது பெற்றோர்களின் விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

“பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் உங்களுடைய விருப்பத் தேர்வு மொழி என்ன என்பது கேட்கப்படும். அவர்கள் வழங்கும் பதில்களுக்கு ஏற்ப அதற்கு தகுந்தவாறு அவர்கள் வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்ற கொள்கையோடு இருமொழித் திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முனைந்துள்ளது.

Ramasamy---Sliderஇந்தப் பரிட்சார்த்தத் திட்டத்தில் பங்கு பெற, பள்ளிகள் அதற்கான கற்பிக்கும் சாதனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் இருமொழித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். பெற்றோர்களின் முழு ஆதரவும் பெறப்பட வேண்டும் என்பதோடு, மாணவர்கள் தேசியமொழியில், நாடளாவிய விகிதாச்சாரத்தை விடக் கூடுதலான திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

இராமசாமி கருத்துக்கு மறுப்பு

இருமொழித் திட்டத்தால் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு அழிந்து விடும் என துணை முதல்வர் இராமசாமி போன்றவர்கள் கூறிவரும் கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அசிமா, “தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குத்தான் இருமொழித் திட்டம் அதிகமாக பயன்தரும். காரணம், அவர்களுக்கு விருப்பமோ இல்லையோ, இடைநிலைப் பள்ளிகளுக்கு வரும்போது அவர்கள் கண்டிப்பாக இந்தப் பாடங்களை ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் பயில வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதோடு, தமிழ் இடைநிலைப் பள்ளிகளும் நாட்டில் இல்லை என்பதால் இவர்கள் கட்டாயம் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் இந்தப் பாடங்களை இடைநிலைப் பள்ளிகளில் பயில வேண்டியதிருக்கும்” எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

“இருமொழித் திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட விஞ்ஞான, கணித, தொழில்நுட்பப் பாடங்களை நமது மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்பதற்கு வாய்ப்பு தராமல், அவர்களை ஏன் முடக்கி வைக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள அசிமா, “இருமொழித் திட்டத்தின் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயன்கள் கிட்டும் என்பதோடு, அவர்களுக்கு மேலும் கூடுதலான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வண்ணம் புதிய வாயில்கள் அவர்களுக்காக எதிர்காலத்தில் திறக்கப்படும்” என்றும் வாதிடுகின்றார்.

noor_azimah_abdul_rahim_page_இரு மொழித் திட்டம் என்பது மேம்போக்காகக் கொண்டுவரப்படும் திட்டமல்ல என்றும் 100-க்கும் மேற்பட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளை அணுகி, ஆய்வுகள் நடத்தி, முறையாக திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்ட திட்டம் என்றும் அசிமா (படம்) அந்தத் திட்டத்தைத் தற்காக்கின்றார்.

தங்களின் அமைப்பான ‘கல்விக்கான பெற்றோர் செயல் நடவடிக்கைக் குழு’ இருமொழித் திட்டத்தை பகுத்தாய்வதில் தீவிர கவனம் செலுத்தியது என்றும் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னால் அதிலுள்ள குறைபாடுகளைக் களைவதற்கும், பலவீனங்களைச் சுட்டிக் காட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியது என்றும் அசிமா கூறியுள்ளார்.

“இருமொழித் திட்டத்திற்கு அப்பாலும் நாம் சிந்திக்க வேண்டும். நமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகள், மேலும் சிறந்த, கூடுதலான மற்ற வகை வாய்ப்புகள் ஆகியவை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்” என்றும் அசிமா கேட்டுக் கொண்டுள்ளார்.

-இரா.முத்தரசன்