கோலாலம்பூர் – மலேசிய விமானம் எம்எச்370 மாயமாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அனைத்துலக அளவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவ்விமானத்தின் இறக்கையைச் சேர்ந்த சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டு அது எம்எச்370 விமானத்தினுடையது தான் என ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலேசியா, ஆஸ்திரேலியா, பெய்ஜிங் ஆகிய மூன்று நாடுகளும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடத்தி வந்த தேடுதல் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இதனிடையே, வான்போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய மர்மமாக இருந்து வரும் எம்எச்370-ஐ கண்டறிய தன்னார்வ நிபுணர்களை வரவேற்பதாக மலேசிய அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி கூறுகையில், “முதல் முறையாக அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். ஆமாம்.. அவர்களாலும் முடியும். முறையான நிபுணத்துவம் பெற்றவர்கள், ஆழ்கடல் பற்றிய அனுபவம் பெற்றவர்கள் இந்தத் தேடல் பணியில் பங்கேற்கலாம். என்றாலும், விமானத்தின் பெரிய பாகம் கிடைக்கும் வரைக்குமான செலவுகளை அவர்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். விமானம் கிடைத்துவிட்டால், மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து சன்மானம் வழங்கப்படும்” என்று என்எஸ்டி-யிடம் தெரிவித்துள்ளார்.