ஜோகூர் பாரு – நட்பு ஊடகங்களில் பரவி வரும் ‘பங்சா ஜோகூர்’ என்ற அடையாள அட்டை குறித்தத் தகவலில் உண்மை இல்லை என்றும், அப்படி ஒரு அடையாள அட்டையை மாநில அரசோ அல்லது அரசு சார்ந்த துறைகளோ வெளியிடவில்லை என்றும் ஜோகூர் மந்திரி பெசார் அலுவலகம் அறிவித்தது.
மாநில அரசாங்கத்திற்குத் தொடர்பில்லாத அது போன்ற அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோகூர் மாநில அரசு தெரிவித்தது.
இது குறித்து ஜோகூர் மாநில அரசாங்கச் செயலாளர் அஸ்மி ரோஹானி ஸ்ரீஆலம் காவல்துறைத் தலைமையகத்தில் வியாழக்கிழமை மாலை புகார் அளித்தார்.
‘பங்சா ஜோகூர்’ என்ற பெயரில் ஜோகூர் மாநில அரசு தனி அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றது என்றும், பொதுமக்கள் உடனடியாக அதற்கு விண்ணப்பிக்கும் படியும் தகவல் ஒன்று பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இத்தகவலைப் பரப்பியதாக நம்பப்படும் 25 வயது மாணவர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று சனிக்கிழமை அவர் ஜோகூர் பாரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் மொகமட் தெரிவித்தார்.