கோலாலம்பூர் – பினாங்கில் இவ்வாண்டு தைப்பூசத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி என இரு இரதங்கள் பவனி வரப் போவதைத் தான் ஆதரிப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் தாங்களும் தங்க இரத ஊர்வலம் நடத்தப் போவதாக ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
தங்க இரதத்தில் விநாயகரும், வெள்ளி இரதத்தில் முருகனும் இருக்க, இரு இரதங்களும் வீதிகளில் பவனி வந்து பத்துமலைத் திருத்தலத்தை வந்தடையும் என்றும் நடராஜா குறிப்பிட்டார்.
127-வது பத்துமலை தைப்பூசத் திருவிழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடராஜா ஊடகங்களுக்கு அளித்த தகவலில், “வரும் பிப்ரவரி 7-ம் தேதி, செவ்வாய்க்கிழமை, இரவு 10 மணியளவில், கோலாலம்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும் வெள்ளி இரதம், மறுநாள் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் பத்துமலை திருத்தலத்தை வந்தடையும்” என்று தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு பத்துமலைத் தைப்பூசத் திருவிழாவில் சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.