வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் குடிநுழைவு மீதிலான கடுமையான சட்டவிதிகள் காரணமாக, ஏறத்தாழ 8 மில்லியன் சட்டவிரோதக் குடியேறிகள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த பத்தாண்டுகளில் எந்த ஓர் அமெரிக்க அதிபரும் இத்தகைய அதி தீவிரமான, கடுமையான அதிரடி மாற்றங்களைப் பிறப்பித்ததில்லை என்று கூறும் அளவுக்கு டிரம்ப் செயலாற்றி வருகின்றார். இதனால் கடும் கண்டனங்களையும் சந்தித்து வருகின்றார்.
இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகத்தான் அமெரிக்க வாக்காளர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தார்கள் எனக் கூறி வரும் டிரம்ப், பொதுமக்கள் போராட்டம், நீதிமன்றங்களின் எதிர்ப்புகள், வெளிநாட்டுத் தலைவர்களின் கண்டனங்கள் ஆகியவற்றையும் எதிர்நோக்குகின்றார்.