கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அமைச்சரவையில் இருந்து ஓர் அமைச்சர் பதவி விலகியுள்ளதாக ஆரூடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த அமைச்சர் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் (படம்) அல்ல என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தெளிவுபடுத்தியுள்ளார்.
நேற்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, தனது டுவிட்டர் பக்கத்தில் நஜிப் அமைச்சரவையிலிருந்து ஓர் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார் எனப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
எந்த அமைச்சரும் பதவி விலகியதாக தன்னிடம் தெரிவிக்கவில்லை என நஜிப் தெரிவித்துள்ள வேளையில், மற்றொரு அம்னோ அமைச்சரா இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தானும் பதவி விலகவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும், பதவி விலகும் அந்த அமைச்சர் அஸ்மின் அலி பக்கம் போவதற்குப் பதிலாக தன்னைச் சந்தித்தால் நல்லது என்றும், “நான் உங்களின் நண்பன்” என்றும் மற்றொரு அமைச்சரான நஸ்ரி அசிஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையில் பதவி விலகும் அந்த அம்னோ அமைச்சர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் அதனைத் தெரிவித்த காரணத்தால், அவரது பெயரை வெளியிடப்போவதில்லை என்றும் அதனால் அவருக்கு நெருக்கடிகள் வரலாம் என்றும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.