கோலாலம்பூர் – வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், அரசியல்வாதி, தமிழ் உணர்வாளர் என பன்முகத் திறமைகளும் ஆளுமைகளும் கொண்ட பொன்முகம் நேற்று தனது 75-வது வயதில் காலமானார்.
நேற்று புதன்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைக் காப்பாற்றும் மருத்துவ முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“உதயம்” தந்த அறிமுகம்
எழுத்தாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பொன்முகம். சண்முகம் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் தனது தந்தையாரின் பெயரான பொன்னன் என்பதை இணைத்து, பொன்முகம் என்றே தன்னை அழைத்துக் கொண்டார்.
1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய அரசாங்கத்தின் தகவல் இலாகாவின் வெளியீடாக, சிறப்பான முறையில் ‘உதயம்’ என்ற மாதப் பத்திரிக்கை வெளிவரத் தொடங்கியது. அதன் ஆசிரியராகப் பணியாற்றிவர் பொன்முகம்.
அவருக்குப் பின்னர்தான் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் எம்.துரைராஜ் உதயம் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணிகளைத் தொடர்ந்தார்.
பத்திரிக்கைப் பணிகளுக்குப் பின்னர் சட்டக் கல்வியின் மீது ஆர்வம் கொண்டு, இலண்டன் சென்று சட்டம் படித்த பொன்முகம் பின்னர் வழக்கறிஞராகப் பணி புரிந்தார்.
சமூகம், அரசியல் குறித்த பல்வேறு கட்டுரைகளை அடிக்கடி தமிழ்ப் பத்திரிக்கைகளில் எழுதி வந்தார்.
அரசியல் பிரவேசம்
அரசியலில் தீவிர ஈடுபாடும், சிந்தனைகளும் கொண்ட பொன்முகம், முதலில் செபுத்தே நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு மஇகா கிளைத் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டார். அப்போது மஇகா பேராளர் மாநாடுகளில், பேராளராகக் கலந்து கொண்டு தனித் தமிழில் அழகான தமிழ் உரைகளை வழங்கி பேராளர்களைக் கவர்ந்தார்.
இருப்பினும், கால ஓட்டத்தில் அப்போதைய மஇகா தலைவர்களோடு கொண்ட முரண்பாடுகள் காரணமாக, மஇகாவிலிருந்து விலகி, எதிர்க்கட்சி அரசியலில் பொன்முகம் ஈடுபாடு காட்டினார். ஜசெகவில் இணைந்து தீவிரமாக ஈடுபட்ட அவர், பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டார்.
அப்பழுக்கற்ற தமிழ் உணர்வு
இறுதிக்காலம் வரை, சுறுசுறுப்பாக செயலாற்றி வந்த அவருக்கு இப்போது வயது 75 என்பது அவரை நன்கு அறிந்த, என்னைப் போன்றவர்களுக்கும் கூட ஆச்சரியமாக இருக்கிறது.
அவரது தமிழ் உணர்வும், தமிழ்ப் பண்பாடு மீதிலான அவரது வெறித்தனமான உணர்வுகளும் அவரை அறிந்தவர்களிடத்தில் பிரபலம். எப்போதும் தனித் தமிழில்தான் – இயன்றவரை ஆங்கிலம் கலக்காமல்தான் – எப்போதும் சாதாரணமாகவே உரையாடுவார். தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும், இயன்றவரை வேட்டி, ஜிப்பாவுடன்தான் வருவார்.
அவருடன் அரசியல் பேசினால், அவரது முரண்பாடான, ஆனால் உறுதியான, கருத்துகளோடு ஒத்துப் போவது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், அந்த விவாதங்களில் தொனிக்கும் அவரது சமுதாய உணர்வு, தமிழின் மீதான காதல், தமிழ் கலாச்சார, பண்பாடுகளின் மீது அவர் கொண்டிருக்கும் தீவிர ஈடுபாடு – போன்ற அம்சங்களில் கொஞ்சம் கூட நம்மால் குறை காண முடியாது. அவ்வளவு தூய்மையான உணர்வுகளோடு உலா வந்தவர் பொன்முகம்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ‘செல்லியல்’ குழுமத்தின் சார்பிலான எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்!
-இரா.முத்தரசன்