சென்னை – தான் இசையமைத்தப் பாடல்களை தனது அனுமதியின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேடைகளில் பாடக் கூடாது என இளையராஜா தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருப்பது சரியே என பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு பாடல் என்பது திரையரங்கைத் தவிர கச்சேரிகள் போன்ற பொது இடங்களில் பாடப்பட்டால், அந்நிகழ்ச்சியில் வசூலாகும் தொகை, அப்பாடலை இசையமைத்த இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும், தயாரிப்பாளருக்கும் தான் போக வேண்டும் என்றும் மதன் கார்க்கி குறிப்பிட்டிருக்கிறார்.
பாடலுக்கான உரிமத் தொகைகளை ஐபிஆர்எஸ் என்ற அமைப்பு தான் வசூலித்துக் கொடுக்கும் என்றும், இளையராஜாவே பொது மேடைகளில் அப்பாடல்களை பாடலாசிரியர், தயாரிப்பாளரின் அனுமதியின்றி இசையமைக்க முடியாது என்றும் மதன் கார்க்கி தெரிவித்திருக்கிறார்.
அவ்வாறு பாடலாசிரியர், தயாரிப்பாளரின் அனுமதியின்றி பொது மேடைகளில் இளையராஜா இசையமைத்தால், பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் அவர் மேல் வழக்குத் தொடுக்க சட்டத்தில் இடமிருப்பதாகவும் மதன் கார்க்கி குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, இளையராஜா, எஸ்.பி.பி இடையில் பல வருட நட்பு இருந்தாலும் கூட, பாடலுக்கான உரிமை என்ற விசயத்தில் சட்டப்படி நடப்பது தான் முறை என்றும், பாடலைப் பாடுபவருக்கு உரிமைத் தொகையைப் பகிரும் படி இதுவரையில் சட்டம் இல்லை என்றும் மதன் கார்க்கி தெரிவித்திருக்கிறார்.