கோலாலம்பூர் – மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு, மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவிற்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன், அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் டாக்டர் சுப்ரா, இந்தியாவில் இருந்தபடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு குறித்த தனது வருத்தத்தை, மலேசியாவுக்கான இந்தியத் தூதரிடம் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்த இந்தியத் தூதர், 6 மாதத்திற்குள்ளான விசா எடுக்கும் மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு, அதே விலையில் தான் விசா கட்டணம் இருக்கும் என்றும், மற்ற விசாவுக்கான புதியக் கட்டணத்தை தான் மலேசியா வந்தவுடன் பரிசீலனை செய்வதாகக் கூறியிருப்பதாகவும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பிரதமர் நஜிப்புடனும், இது குறித்து தான் கலந்தாலோசித்ததாகவும், நஜிப்பும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் விசா கட்டண உயர்வு குறித்து பேசியிருப்பதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.
இந்திய சுற்றுலாப் பயணிகளை மலேசியாவிற்கு அதிகம் வரச் செய்ய, மலேசிய அரசு இலவச விசாவை அறிவித்திருக்கும் வேளையில், அதற்கு நேர்மாறாக இந்தியா, தனது விசா கட்டணத்தை உயர்த்தியிருப்பது மலேசிய இந்தியர்களை மிகவும் அதிருப்தி அடையச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் டாக்டர் சுப்ரா, குறிப்பாக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வோரை அது மிகவும் பாதிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.