Home Featured நாடு ஜாகிரைக் கைது செய்வதில் தீவிரமாக இந்தியா: தீவிரவாதி பட்டியலில் இல்லை என்கிறது மலேசியா!

ஜாகிரைக் கைது செய்வதில் தீவிரமாக இந்தியா: தீவிரவாதி பட்டியலில் இல்லை என்கிறது மலேசியா!

874
0
SHARE
Ad

zakir-naikகோலாலம்பூர் – இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், அனைத்துலக சட்டத்தின் தீவிரவாதிகள் பட்டியலில் இல்லை என்பதால், அவர் மலேசியாவிற்குள் நுழைய எந்த ஒரு தடையும் இல்லையென உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் (யுன்என்எஸ்சிஆர்) 1988 மற்றும் யுஎன்எஸ்சிஆர் 1267 ஆகியவற்றின் பட்டியலில் ஜாகிர் நாயக் சேர்க்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

உலகில் பல நாடுகளில் ஜாகிர் நாயக் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மலேசியா மட்டும் ஏன் தடைவிதிக்கவில்லை என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, “அவர் நாட்டின் சட்டத்தை மீறவில்லை என்பதால், அவர் மலேசியாவிற்குள் நுழையத் தடை விதிக்க முடியாது” என உள்துறை அமைச்சு எழுத்துப் பூர்வ பதில் அளித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அமலாக்கப் பிரிவினரிடமிருந்து பெறப்படும் பட்டியலின் அடிப்படையில், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை, நாட்டிற்குள் நுழைய விடாமல் மலேசிய குடிநுழைவு இலாகா தடை விதிக்கும்.

அப்பட்டியலின் படி, கடந்த 2010 முதல் 2017-ம் ஆண்டு வரையில், மொத்தம் 1,220,054 பேர் குடிநுழைவு இலாகாவின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்று நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அண்மையில், ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களை மறுத்த உள்துறை அமைச்சு, அவர் நிரந்தர வசிப்பிட உரிமைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அந்த விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் தான் உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜாகிர் விவகாரத்தில் இந்தியா கடுமை

இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது உட்பட ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் இந்தியா, இந்த விவகாரத்தில் தொடர்ந்து கடுமையாக நடந்து கொண்டு வருகின்றது.

ஜாகிர் நாயக் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கும் இந்தியா, அவரைக் கைது செய்ய தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது.

கடந்த 10 மாதங்களாக ஜாகிர் நாயக், சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, வரும் ஏப்ரல் 17-ம் தேதிக்குள், ஜாகிர் நாயக், சரணடைந்து, விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என தேசிய விசாரணை முகமை புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.

ஏற்கனவே மார்ச் மாதத்தில் இரண்டு முறை நேரில் ஆஜராக, ஜாகிர் நாயக்கிற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் கூட, ஜாகிர் நாயக் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.