Home Featured நாடு “மலேசியாவிற்கு ஜாகிர் நாயக் தேவையில்லை” – டாக்டர் சுப்ரா கருத்து!

“மலேசியாவிற்கு ஜாகிர் நாயக் தேவையில்லை” – டாக்டர் சுப்ரா கருத்து!

825
0
SHARE
Ad

subramaniam-drகோலாலம்பூர் – இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவுக்குத் தேவையில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தேசிய உருமாற்றம் 2050 (டிஎன்50) மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா, இந்தியாவால் தீவிரவாத விசாரணைக்கு உட்படுத்தப்படவிருக்கும் ஒருவருக்கு மலேசியா நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது குறித்து இந்திய இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

“ஜாகிர் நாயக் மலேசியாவுக்கு தேவையில்லை என்றே நினைக்கிறேன். இந்த நாட்டில் இஸ்லாமின் வளர்ச்சியில் அவர் பங்கேற்கப் போகிறாரா? அதற்கு இல்லை என்பதே பதில். என்னவெல்லாம் அவர் செய்கிறாரோ, அதெல்லாம் மலேசியச் சூழலுக்கு வெளியே தான் இருக்கிறது” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், ஜாகிர் நாயக்கிற்கு அரசாங்கம் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

“இது நமது தற்போதைய சமய இயக்கவியலைப் பிரதிபலிக்கிறது. இந்த விவகாரத்தை நாம் எவ்வாறு நிர்வகிக்கப் போகிறோம் என்பது தான் நமக்குப் பிரச்சினையே” என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதை அரசாங்கம் சில தினங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

இந்நாட்டில் பிறந்தவர்கள் பலர் இன்னும் நாடற்றவர்களாக இருந்து வரும் நிலையில், ஜாகிர் நாயக்கிற்கு அரசாங்கம் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியிருப்பது மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.