கோலாலம்பூர் – எழுத்தாளரும், ‘செல்லியல்’ ஊடகத்தின் நிருவாக ஆசிரியருமான இரா.முத்தரசன் எழுதிய ‘மண்மாற்றம்’ என்ற நாவல் மற்றும் ‘செல்லியல் பார்வைகள்’ கட்டுரைத் தொகுப்பு – என இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2017ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெறுகின்றது.
முத்து நெடுமாறன் வாழ்த்துரை – மின்னூல் வெளியீடு
வித்தியாசமான முறையில், அநேகமாக மலேசியாவில் தமிழ் நூல் வெளியீட்டில் இதுதான் முதன் முறை எனக் கூறும் அளவுக்கு, முத்தரசனின் இந்த இரண்டு நூல்களின் அச்சு வடிவம் வெளியிடப்படும் அதே வேளையில், இந்த நூல்களின் மின்னூல் வடிவமும் வெளியிடப்படுகின்றது.
மின்னூல் வடிவத்தை ‘முரசு மென்பொருள்’ மற்றும் ‘செல்லினம்’ உருவாக்குநரும், செல்லியல் ஊடகத்தின் இணை தோற்றுநருமான முத்து நெடுமாறன் வெளியிடுவதோடு வாழ்த்துரையும் வழங்குகிறார்.
இந்த இரு நூல்களின் மின்னூல் வடிவம் அனைத்து வாசகர்களும் படித்து மகிழும் வண்ணம் இணையம் வழி இலவசமாகவே வழங்கப்படுகின்றது.
எஸ்.கே.தேவமணி, எம்.சரவணன், ப.கமலநாதன், பி.சகாதேவன் சிறப்புரை
செல்லியல் துணை ஆசிரியர் பீனிக்ஸ் தாசனின் வரவேற்புரையோடு தொடங்கும் நிகழ்ச்சியில், தொடர்ந்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை இயக்குநர் டத்தோ பி.சகாதேவன், மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், கல்வித் துறை துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.
எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்பு வருகை
நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு வருகை புரிவார்.
“மண்மாற்றம்” நாவலுக்கு மலாயாப் பல்கலைக் கழக இந்தியப் பகுதியின் இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் வழங்கிய ஆய்வுரையின் முக்கிய அம்சங்களை மின்னல் வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலம் நிகழ்ச்சியில் வாசிப்பார்.
வெளிநாட்டு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் முனைவர் கிருஷ்ணன் மணியம் (படம்) இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.
முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு சமர்ப்பணம்
நூல்களின் முதல் படிவங்கள் தலைநகர் செந்துலில் இயங்கி வரும் ‘முத்தமிழ்ப் படிப்பகம்’ நூல் நிலையத்திற்கு சமர்ப்பணமாக வழங்கப்படுகின்றது. இதனை முத்தமிழ்ப் படிப்பகத்தின் முன்னாள் தலைவரும், அறக்காப்பாளருமான வே.சிவராஸ் பெற்றுக் கொள்கின்றார்.
மலேசிய இந்தியக் குத்தகையாளர் சங்கத் தலைவர் டத்தோஸ்ரீ சுகுமாறன் முதல் நூலைப் பெறுகின்றார்.
நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி நூலாசிரியர் இரா.முத்தரசன் கேட்டுக் கொள்கிறார்.