புதுடெல்லி – நேற்று திங்கட்கிழமை, பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பிரேம் சாகரின் மகள் சரோஜ், தனது தந்தையின் இறப்பிற்குப் பதிலடியாக ’50 பாகிஸ்தானியர்களின் தலை வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவரது தியாகம் மறக்கப்படக்கூடாத ஒன்று. அவரது இறப்பிற்குப் பதிலடியாக எங்களுக்கு 50 தலைகள் வேண்டும்” என்று கூறினார்.
பிரேம் சாகரின் மனைவி தனது கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் இருக்கிறார். அவருக்கு சரோஜ் ஆறுதல் கூறி வருகின்றார்.
“இந்த நாட்டிற்காக எனது சகோதரர் தனது வாழ்வையே தியாகம் செய்திருக்கிறார். அதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஆனால், பாகிஸ்தான் இராணுவத்தால் அவரது தலை துண்டிக்கப்பட்டதை நினைக்கும் போது இதயமே கனக்கிறது” என்று பிரேம் சாகரின் சகோதரர் தயாஷங்கர் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண காத்தியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தினர் மீது பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் தலைமை கான்ஸ்டபிள் பிரேம் சாகரும், நாயிப் சுபேதார் பரம்ஜித் சிங்கும் கொல்லப்பட்டனர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், இறந்த பிரேம் சாகர் மற்றும் பரம்ஜித் சிங்கின் உடலை கைப்பற்றிய பாகிஸ்தான் இராணுவத்தினர், இருவரின் தலையைத் துண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.