மான்செஸ்டர் – நேற்று திங்கட்கிழமை இரவு அரியான் கிராண்டே என்ற பிரபல அமெரிக்க இளம் பாடகியின் இசை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த வேளையில் இரவு 10.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரங்கிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி நடைபெற்ற மான்செஸ்டர் அரினா என்ற அரங்கின் அதிகாரபூர்வ அறிக்கையில், மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த வாசல்களின் அருகே, அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் இயக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன.
நிகழ்ச்சி முடிவடைந்து இரசிகர்கள் அரங்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த தருணத்தில் நன்கு திட்டமிடப்பட்ட இந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் வரிசையாக நடத்தப்பட்டதில் இதுவரை 19 பேர் மரணமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்தத் தாக்குதலை தற்கொலைப் படையினர் மேற்கொண்டதாகவும், ஓர் ஆண் தற்கொலைத் தாக்குதல்காரனாக இருக்கலாம் என்றும் முதல் கட்டப் புலனாய்வுகள் தெரிவிக்கின்றன.
இவர்தான் நேற்று மான்செஸ்டரில் இசைநிகழ்ச்சி நடத்திய அமெரிக்க பாடகி – அரியான் கிராண்டே
பாடகி அரியான் கிராண்டே ஏராளமான பதின்ம வயது இரசிகர்களைக் கொண்டிருந்தவர் என்பதால், பாதிப்படைந்தவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை அறிந்து அரியான் கிராண்டேயும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.